கொழும்பு நகரில் எந்தவொரு வீட்டையும் அகற்றுவதற்கு இடமளிக்கப் போவதில்லை : ரணில்

கொழும்பு வாழ் மக்களை மையப்படுத்தியதான கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகம் இங்குள்ள அனைத்து மக்களினதும் பாதுகாப்பினையும் உரிமையினையும் உறுதிப்படுத்துவதற்கு உறுதிபூண்டிருக்கின்றது. அத்துடன் குறை வருமானம் பெறுவோரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது பிரதான பணியாகும். இதற்கு சகலரினது ஒத்துழைப்பும் மிகமிக அவசியம் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி உறுதியளித்ததுபோல் கொழும்பில் எந்த வொரு வீடும் உடைத்து அப்புறப்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. இதனை நிலைப்படுத்துவதற்கு கொழும்பு மாநகரசபையின் அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற கொழும்பு மாநகர முதல்வர் ஏ.ஜே.எம். முஸம்மிலின் சத்தியப்பிரமாண நிகழ்விலேயே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் இங்கு மேலும் கூறுகையில், கொழும்பு மாநகரசபையின் முதல்வர் எனும் போது அது ஆசியாவிலேயே மிகவும் பழைமை வாய்ந்ததும் அதே நேரம் கௌரவம் மிக்கதுமான பதவியாகும். இவ்வாறான பெருமைமிகு பதவியானது முஸம்மிலுக்கு கிடைத்தமை மற்றும் பிரதிநிதி முதல்வர் பதவி டயட்டஸ் பெரேராவுக்கு கிடைத்ததையிட்டு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாநகர முதல்வர் எனும் பதவிக்கு விஷேடத்தன்மை வாய்ந்த சக்தி இருக்கின்றது என்பதை முன்னாள் முதல்வரும் அமரருமான சுகத்ததாச நிரூபித்திருக்கின்றார். எனவே இந்த பதவியினுடாக கொழும்பு வாழ் மக்களுக்கு சிறந்த சேவைகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். அதற்கு பிரதி மேயர் உள்ளிட்ட சகல உறுப்பினர்களினதும் ஒத்துழைப்பு அவசியமானதாகும்.

நாம் வீதிகளுக்கு காப்பட் போடுவதாகக் கூறி வாக்குகளைக் கேட்கவில்லை. மாறாக கொழும்பு நகரில் வீடுகள் உடைக்கப்படுவதை தடுத்து நிறுத்துவதாகவும் முச்சக்கரவண்டி மற்றும் நடைபாதை வியாபாரிகள் உள்ளிட்ட குறை வருமானம் பெறுவோரைப் பாதுகாத்து கொழும்பு வாழ் அனைத்து மக்களினதும் பாதுகாப்பையும் உரிமைகளையும் உதுதிப்படுத்துவோம் என்றே வாக்குறுதியளித்தோம்.

அந்தவகையில் நாம் அளித்த வாக்குறுதிகள் அவ்வாறே நிறைவேற்றப்படும். கொழும்பு நகரில் எந்தவொரு வீடும் உடைத்து அகற்றப்படுவதற்கு நாம் இடமளிக்கப் போவதில்லை. கீழ் மட்டம் , மேல் மட்டம் என்ற வேறுபாடுகள் இங்கு இடமில்லை. கொழும்பு வாழ் மக்களுக்கான சேவையே இங்கு பிரதானமாகும். மேலும் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் வாய்க்கால்கள் கான்கள் சுத்தப்படுத்துதல், பாதைகள் சீரமைத்தல், மின்சார வசதிகள் பாடசாலைகளுக்கான தேவைகள் ஆகியவை தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்படும்.

கொழும்பு வாழ் மக்கள் அனைவருக்குமே கொழும்பு நகர் சொந்தமானது. அந்த உரிமையை நாம் பெற்றுக் கொடுப்போம். தொழில் வசதிகள் கடன் திட்டங்கள் என பல்வேறு வேலைத் திட்டங்கள் எம்மிடத்தில் உள்ளன. புதிதாக பதவியேற்றுள்ள மேயர் கொழும்பு வாழ் மக்களுக்காக பல திட்டங்களை வகுத்துள்ளார். அவற்றை நிறைவேற்றுவதற்கும் மக்களின் தேவையறிந்து செயற்படுத்துவதற்கும் சபைக்குத் தெரிவாகியுள்ள அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். கொழும்பு மக்களை மையப்படுத்திய நிர்வாகமாக இந்த சபை அமைய வேண்டும் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply