ஸ்ரீதரன் எம்.பி.யின் கூற்றுக்கு ஈ.பி.டி.பி. கண்டனம் தெரிவிப்பு
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் சுப்ரமணியம் தனபாலசிங்கம் தாக்கப்பட்டமை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகத்தின் அடிப்படையில் இணையத்தளங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளமை கண்டனத்துக்குரியது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையொன்றில் கூறியுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனின் மேற்படி கூற்றுக்கு கண்டனம் தெரிவித்து அக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் ஏற்பட்டுள்ள பிளவின் காரணமாக பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் ஆதரவு தேட சிவஞானம் ஸ்ரீதரன் முற்பட்டார். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கூட்டமைப்புக்கு எதிராகப் போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பத்மினி சிதம்பரநாதன் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் நடத்திய இரகசிய ஆலோசனையில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் தனபாலசிங்கமும் சமூகமளித்திருந்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இரகசிய ஆலோசனையில் ஈடுபட்ட அணியினருடன் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் நெருக்கமான உறவினைக் கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தம்மிடம் வலுவடைந்து வரும் கருத்து முரண்பாடுகளையும் பிளவுகளையும் பூசி மெழுகும் நோக்குடன் இத்தாக்குதல் சம்பவத்தை திசை திருப்பி ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மீது பழிபோட அவர் முயற்சிக்கின்றார்.
இத்தகைய கோழைத்தனமான தாக்குதல் சம்பவங்களை கண்டுபிடிப்பதுடன் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறோம்.
பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மீதான தாக்குதல் சம்பவத்தினை கண்டிப்பதோடு பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் பொறுப்பற்றக் கருத்துக்கும் எமது கண்டனத்தை வெளிப்படுத்துகின்றோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply