சிறப்பு நீதிமன்றத்தில் ஜெ ஆஜராக வேண்டும்

சொத்துக் குவிப்பு வழக்கில், தமிழக முதல்வர் ஜெயலலிதா பெங்களூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நாளை வியாழக்கிழமை ஆஜராக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பாதுகாப்புக் காரணங்களால், நாளை நேரில் ஆஜராவதை ஒத்திவைக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டதே இதற்குக் காரணம்.

நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கு மீண்டும் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, கர்நாடகத்தின் தரப்பில் தலைமைச் செயலர் மற்றும் காவல் துறைத் தலைவர் ஆகியோரது கருத்துக்களுடன் புதிய மனுவை கர்நாடக அரசு தாக்கல் செய்தது. அதில், ஜெயலலிதாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க, விமான நிலையத்தில் இருந்து சிறப்பு நீதிமன்றம் வரை முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக உறுதியளிக்கப்பட்டது.

கர்நாடக அரசு இவ்வாறு உறுதியளித்திருக்கும் நிலையில், அந்தப் பாதுகாப்பு குறித்து சந்தேகம் எழுப்புவது நியாயம் இல்லை என்று கூறிய நீதிபதிகள், ஜெயலலிதாவின் மனுவைத் தள்ளுபடி செய்தார்கள்.

பாதுகாப்புக் காரணங்களால், சிறப்பு நீதிமன்றம், மத்திய சிறை வளாகத்துக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் கர்நாடகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நீங்கள் (ஜெயலலிதா) பொதுமக்கள் பிரதிநிதி. எவ்வளவு நாட்களுக்கு மக்களிடமிருந்து நீங்கள் விலகியிருக்க முடியும்? ஓரளவு நியாயமாக நடந்துகொள்ளுங்கள்’ என்று நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர்.

இதையடுத்து, நாளை வியாழக்கிழமை, பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா நேரில் ஆஜராக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி ஜெயலலிதா முதலில் தாக்கல் செய்த மனுவை சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. அதையடுத்து, உச்சநீதிமன்றத்தை நாடினார். ஆனால், உச்சநீதிமன்றமும் அதை ஏற்க மறுத்துவிட்டது. ஜெயலலிதாவின் யோசனைப்படி, அக்டோபர் 20-ம் தேதி ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply