தேர்தல் காலத்தில் வழங்கிய அனைத்து உறுதிமொழிகளையுமே நிறைவேற்றிவிட முடியாது : பிரதமர்

நாட்டில் மிகவும் பெறுமதிமிக்க காணிகள் கொழும்பிலேயே காணப்படுகின்றன. இவ்வாறான பெறுமதிமிக்க காணிகளை குடிசைகள் அமைப்பதற்கும் குப்பைகளைக் கொட்டுவதற்கும் பயன்படுத்துவதா எனக் கேள்வியெழுப்பிய பிரதமர் தி.மு.ஜயரத்ன கொழும்பு நகரை பெறுமதிமிக்கதும் அழகுமயப்படுத்தப்பட்டதுமான நகராக மாற்றியமைப்பதற்கு இரு தரப்பினருமே செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற இலங்கை வீடமைப்பு அபிவிருத்தி நிதிக்கூட்டுத்தாபன வங்கி சட்டமூலம் மற்றும் மதுவரி கட்டளைச் சட்டத்தின் கட்டளை ஆகியவற்றின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்;

எதிர்க்கட்சிகளிடம் இருந்து நீதியானதும் நியாயமானதுமான விமர்சனங்களை, ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது. இங்குஅரசு காணி, வேறு நிறுவனங்களுக்கு விற்கப்படுவதாக பரவலான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

வெறுமையாகக்கிடக்கின்ற அரச காணிகளை இயன்றளவில் பயன்படுத்தி அதிலிருந்து பயன்களைப் பெற்றுக்கொள்வதே சிறந்ததாகும். இராணுவத் தலைமையகம் அமைந்துள்ள காணியை ஹோட்டல் நிறுவுவதற்காக நீண்டகால அடிப்படையில் வழங்கப்படுவதன் மூலம் பாரிய இலாபம் ஈட்டக்கூடியதாக இருக்கின்றது.

அப்படியல்லாது தற்போது இராணுவத் தலைமையகம் பேணப்பட்டு வருகின்ற இடமானது பிரயோசனமற்ற வகையில் கிடக்கின்றது. அந்த வகையில் மக்களின் , நாட்டின் பயன்பாடு கருதி ஏன் இந்தக் காணியை நிறுவனங்களுக்கு வழங்கமுடியாது? ஏன் இராணுவத் தலைமையகத்தை வேறு இடத்துக்கு கொண்டுசெல்ல முடியாது என்று கேட்க விரும்புகிறேன்.மக்களுக்கு நன்மைகளைப் பயக்கும் முயற்சிகளில் நாம் ஈடுபடவேண்டும்.

நாட்டில் மிகவும் பெறுமதிவாய்ந்த காணிகள் கொழும்பிலேயே இருக்கின்றன. அவ்வாறு பெறுமதிமிக்க காணிகளில் குடிசைகளை அமைத்துக்கொண்டும் குப்பைகளைக் கொட்டி வைத்துக்கொண்டும் இல்லாவிட்டால் விளையாட்டுத்திடல்களை வைத்துக்கொண்டும் இருப்பதால் பயன் என்ன இருக்கின்றது. இந்தப் பெறுமதிமிக்க காணிகளில் இருந்து ஏன் நாம் பயன்களைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கக்கூடாது என்றே வினவுகின்றேன்.

கொழும்பில் உள்ள காணிகள் மட்டுமல்ல, நாட்டில் வெறுமையாகக் கிடக்கின்ற அத்தனை காணிகளைப் பயன்படுத்தி நன்மைபயக்கும் வகையில் செயற்படவேண்டும். ஏனெனில் உலகளாவிய தொழில்நுட்ப பொருளாதாரத்தில் நாம் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றோம்.

உலகில் பொருளாதார வளர்ச்சியில் முன்னிலை வகிக்கின்ற சீனா கூட தமது நாட்டுக்காணி சுவிற்சர்லாந்துக்கு வழங்கி தொழில் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றது.

கொழும்பு நகரில் வீடுகளை உடைக்க இடமளிக்கப் போவதில்லை என ஐக்கிய தேசியக்கட்சி கொழும்பில் பிரசாரங்களை மேற்கொண்டது. அவ்வாறு பிரசாரத்தை மேற்கொண்டே கொழும்பு மாநகரசபையைக் கைப்பற்றியது.

எம்மைப் பொறுத்தவரையில் கொழும்பு மாநகரசபையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்தது வெற்றியும் இல்லை. ஆளும் கட்சிக்கு கிடைத்தது தோல்வியும் இல்லை. ஆனாலும், இந்த இருதரப்பினரையுமே கொழும்பு மக்கள் நிராகரித்திருக்கின்றனர் என்பதே உண்மையாகும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply