கிளிநொச்சியில் புலிகலின் ஆடம்பர பதுங்குகுழிகளை இராணுவத்தினர் கண்டுபிடித்துள்ளனர்

கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் அனைத்து நிர்வாகக் கட்டிடங்களுக்கும் அருகாமையில் இருந்து பாதுகாப்பான வகையில், ஆடம்பரமாக வடிவமைக்கப்பட்ட பதுங்குகுழிகளை இராணுவத்தினர் கண்டுபிடித்துள்ளனர். 
 
விடுதலைப் புலிகளிடமிருந்து கிளிநொச்சியைக் கைப்பற்றிய பின்னர் அங்கு வைக்கப்பட்டிருக்கும் பொறி வெடிகள், கண்ணி வெடிகள் மற்றும் பொறிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினரே இவ்வாறான பதுங்குகுழிகளைக் கண்டறிந்துள்ளனர்.

இவை இரண்டாம் உலக மகா யுத்தத்தின்போது களிமண் மற்றும் சீமெந்து கொண்டு அமைக்கப்பட்ட பதுங்குகுழிகளைக் காட்டிலும் துல்லியமாகவும், “தேக்கு” மரத்தினால் பாதுகாப்பாக வடிவமைக்கப்பட்டிருந்ததாகவும் இராணுவத்தினரை மேற்கோள்காட்டி இந்திய செய்திச் சேவையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இராணுவத்தினர் மேற்கொள்ளும் ஆட்லறி தாக்குதல்களுக்கும், பலத்த விமானக் குண்டுத் தாக்குதல்களின் அதிர்வுகளுக்கும் தாக்குப்பிடிக்கும் வகையில் இவை அமைக்கப்பட்டிருப்பதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேக்கு மரத்தினால் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பதுங்குகுழிகளில், நவீன மின்சார அலங்காரங்களும் காலத்திற்குக் காலம் பயன்படுத்தப்பட்ட குளிரூட்டிகளும் காணப்படுவதாக இராணுவத்தினர் கூறியிருப்பதாக அந்தச் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களைப் பாதுகாக்கும் நோக்கில் இவை ஆடம்பரமாக அமைக்கப்பட்டிருக்கலாம் என இலங்கை இராணுவத்தின் அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் விடுதலைப் புலிகளின் உயர்மட்ட உறுப்பினர்களுக்கும் சர்வதேச முக்கியஸ்தர்களுக்கும் இடையில் சந்திப்புக்களை மேற்கொள்வதற்காக இந்தப் பதுங்குகுழிகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply