30 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகிறது கிரீஸ்

கிரீஸ் பார்லிமென்டில், சிக்கன நடவடிக்கைகளுக்கான இரு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதுமான 48 மணி நேர வேலை நிறுத்தம் நேற்று துவங்கியது. விமானம் முதல் சாதாரண ஆட்டோ வரையிலான அனைத்துப் போக்குவரத்துகளும், அரசு அலுவலகம் முதல் கடைத் தெரு வரையிலான அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டன. முக்கிய நகரங்களில் லட்சக்கணக்கில் மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நிபந்தனை கடன்: கடன் நெருக்கடியில் சிக்கிய கிரீசுக்கு, சர்வதேச நிதியமைப்பு (ஐ.எம்.எப்.,), ஐரோப்பிய யூனியன் (இ.யு.,) மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி (இ.சி.பி.,) ஆகிய மூன்று அமைப்புகளும் கடன் தவணை வழங்கின. முதலில், 110 பில்லியன் யூரோவும் (ஒரு பில்லியன் – 100 கோடி; ஒரு யூரோ – 65 ரூபாய்) இரண்டாவதாக, 109 பில்லியன் யூரோவும் கடன் தவணை வழங்குவதாக இந்த அமைப்புகள் உறுதியளித்தன. பல்வேறு சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற நிபந்தனைகளின் பேரில் தான் இந்தக் கடன் தவணைகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. முதல் தவணையில் இருந்து 8 பில்லியன் யூரோ வழங்க வேண்டிய நிலையில், சிக்கன நிபந்தனைகளை கிரீஸ் நிறைவேற்றியதா என மூன்று அமைப்புகளின் பிரதிநிதிகளும் கடந்த இரு வாரங்களுக்கு முன், ஏதென்சில் பரிசோதனை நடத்தினர். அதன்பின், 8 பில்லியன் யூரோ வழங்கலாம் என பரிந்துரைத்தனர். ஆனால், அது பற்றி, இம்மாதம் 23ம் தேதி கூடும் ஐரோப்பிய நிதியமைச்சர்கள் மாநாட்டில் முடிவு செய்யப்படும் என மூன்று அமைப்புகளும் கூறிவிட்டன.

30 ஆயிரம் ஊழியர்களுக்கு ஆப்பு: மூன்று அமைப்புகளின் நிபந்தனைகளை முழுமையாக அமலாக்கும் விதத்தில், இரு மசோதாக்கள் கிரீஸ் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட உள்ளன. ஒரு மசோதாவில், வரி உயர்வு, ஓய்வூதியம், சம்பளம் குறைப்பு, ஒப்பந்தத் தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்புதல் உள்ளிட்டவையும், மற்றொரு மசோதாவில், நாட்டின் மொத்தம் 7 லட்சத்து 50 ஆயிரம் அரசு ஊழியர்களில், 30 ஆயிரம் பேரை வீட்டுக்கு அனுப்புவது, குறைந்த சம்பளத்திலான பணிகள் உள்ளிட்டவையும் அடங்கியுள்ளன.

எம்.பி.,க்கள் மிரட்டல்: பார்லிமென்டில் பிரதமர் ஜார்ஜ் பப்பண்ட்ரீயின் கட்சிக்குப் பெரும்பான்மை இருந்தாலும், மசோதாக்களுக்கு எதிராக அவரது கட்சியினர் இருவர் ஓட்டளிக்கப் போவதாக மிரட்டியுள்ளனர். மசோதாக்களை நிறைவேற்றித் தருமாறு அவர் எம்.பி.,க்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

48 மணி நேர வேலை நிறுத்தம்: ஏற்கனவே உயர்த்தப்பட்ட வரி, குறைக்கப்பட்ட சம்பளம் இவற்றை எதிர்த்து, கடந்த பல மாதங்களாக அரசு ஊழியர்கள் அவ்வப்போது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். அரசின் சிக்கன நடவடிக்கைகள் மேலும் அதிகரிக்கும் சூழலில், அரசு மற்றும் தனியார் துறையினர் ஒன்றிணைந்து தங்கள் எதிர்ப்பை அரசுக்குக் காட்டும் வகையில், நேற்று முதல் 48 மணி நேர வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டின் இரு மிகப் பெரிய தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தை நடத்துகின்றன. இதில் மொத்தம் 40 லட்சம் ஊழியர்கள் கலந்து கொள்கின்றனர்.

ஸ்தம்பித்தது நாடு: அரசு அலுவலகங்கள், அமைச்சகங்கள், தனியார் நிறுவன அலுவலகங்கள் என நேற்று அனைத்து அலுவலகங்களும் மூடப்பட்டன. பஸ், ரயில் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துகள் முடங்கின. டாக்டர்கள், வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் இணைந்துள்ளனர். விமான ஊழியர்கள் தங்கள் வேலை நிறுத்தத்தை 48 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாகக் குறைத்துக் கொண்டனர். இதனால், உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 150 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன; 160 விமானங்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டது.

குவிகின்றன குப்பைகள்: குப்பை அள்ளுவோர் ஏற்கனவே 17 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த வாரம் தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் குப்பை அள்ளும் பணி நடந்தது. எனினும், நாட்டின் முக்கிய நகரங்களின் தெருக்களில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. பைரியாஸ் என்ற முக்கிய துறைமுகம் நேற்று மூடப்பட்டது. இதன் ஊழியர்கள் 400 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

லட்சக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்: தலைநகர் ஏதென்சில் நேற்று 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான தெசலோனிகியில், 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் ஆர்ப்பாட்டம் செய்தனர். பிரதமர் ஜார்ஜ் பப்பண்ட்ரீ, வேலை நிறுத்தத்தைக் கைவிட்டு, அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

கிரீஸ் பார்லிமென்ட் நிறைவேற்ற உள்ள மசோதாக்களின் முக்கிய அம்சங்கள்:

கிரீசின் 190 ஆண்டுக்கால வரலாற்றில் முதன்முறையாக, பொதுத் துறை ஊழியர்கள் 7,50,000 பேரும், புதிய சம்பளத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுவர்.
அத்திட்டத்தின்படி, அடிப்படைச் சம்பளம் குறைக்கப்படும்; “போனஸ்’ கிடையாது; இவற்றின் மூலம் ஒருவரின் வருமானத்தில் 20 சதவீதம் குறைக்கப்படும். கடந்தாண்டு சிக்கன நடவடிக்கையின்படி இவர்களின் வருமானத்தில் ஏற்கனவே 20 சதவீதம் குறைக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.
இதன்படி, ஒவ்வொரு ஊழியருக்கும் மாதச் சம்பளம் 1,900 யூரோவைத் தாண்டாது. இதன் மூலம் ஆண்டுக்கு 2 பில்லியன் யூரோ சேமிக்கப்படும்.
வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவதற்காக 30 ஆயிரம் ஊழியர்கள் அடையாளம் கண்டறியப்படுவர். இவர்கள், 2009 டிசம்பரில் வாங்கிய சம்பளத்தில் 60 சதவீதம் மட்டும் பெறுவர். ஓராண்டுக்குள், மாற்று வேலைகள் கண்டறியப்படாவிடில் இவர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவர்.
இவர்களில் பாதிப் பேர் ஏற்கனவே ஓய்வு பெறும் வயதில் உள்ளனர். இதன் மூலம் ஆண்டுக்கு 300 மில்லியன் யூரோ சேமிக்கப்படும்.
ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப விரும்பும் நிறுவனங்களுக்கு வசதியாக ஒரு பிரிவு மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளது.
மாதம் 1,000 யூரோவுக்கு மேல் ஓய்வூதியம் பெற்றால், அதில் இனி 20 சதவீதம் துண்டிக்கப்படும். முன்னாள் போலீஸ், ராணுவ வீரராக இருந்தாலும், வயது 55க்கு குறைவாக இருந்தாலும், 40 சதவீதம் குறைக்கப்படும்.
பிற துறை சார்ந்த ஓய்வூதியம் பெறுவோருக்கு, 15 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை குறைப்பு நிர்ணயிக்கப்படும்.
ஓய்வு பெறும் போது வாங்கும் பெரிய தொகையில் 15 சதவீதம் குறைக்கப்படும்.
இந்த குறைப்பால், 1 பில்லியன் யூரோ சேமிக்கப்படும்.
வரி உச்சவரம்பு, ஆண்டுக்கு 8,000 யூரோவில் இருந்து 5,000 யூரோவாக குறைக்கப்படும்.

ஜார்ஜ் பப்பண்ட்ரீ, கிரீஸ் பிரதமர் : “நாட்டின் மக்களாக, ஓர் அரசாக, ஒரு பார்லிமென்ட் அமைப்பாக, நாட்டுக்காக நாம் இந்தப் போரில் தோற்று விடக் கூடாது. நாம் நிச்சயம் வெல்வோம்.

ஜோசப் ஸ்டிக்லிஸ்ட், கொலம்பியா பல்கலைக்கழக பேராசிரியர். இன்னும் மோசமான நிலையை நாம் பார்க்க வேண்டியிருக்கும் என நினைக்கிறேன். ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலும் சிக்கன நடவடிக்கைகளை ஐரோப்பா திணிக்கும் பட்சத்தில், யூரோ மண்டலம் சிதைந்து விடும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply