அதியுயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள காணிகளை மீள ஒப்படைக்க முடியாதிருப்பதற்கான காரணம் என்ன? : ரணில்

1983 காலப்பகுதியில் வடக்கில் அதி உயர் பாதுகாப்பு வலயங்களுக்காகப் பெற்றுக் கொள்ளப்பட்ட காணிகள் மீள ஒப்படைக்கப்படும் என்ற உறுதி வழங்கப்பட்டிருக்கின்றது. தற்போது பிரச்சினை முடிவுக்கு வந்துள்ள நிலையில் வழங்கப்பட்ட உறுதி மொழியின் பிரகாரம் இந்த அதி உயர் பாதுகாப்பு வலயங்களை ஏன் திருப்பி ஒப்படைக்க முடியாதிருக்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சபையில் கேள்வி எழுப்பினார்.
வடக்கில் காணிப் பதிவுகளை மேற்கொள்ள வேண்டுமானால் அங்குள்ள எம்.பி.க்களினதும் பங்களிப்புக்கும் வழிவகுக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் கொண்டு வரப்பட்ட வடக்கில் காணிப் பதிவு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்

காணிப் பிரச்சினையானது பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. வடக்கு., கிழக்கில் எழுந்துள்ள இந்த காணிப் பிரச்சினை கொழும்பு காலிமுகத்திடலிலும் ஏற்பட்டுள்ளது.

காணி விவகாரம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டினை விளங்கிக் கொள்ள முடிகின்றது. காணி உரிமை எனப்படும் போது அது எல்லா வகையிலும் சட்ட ரீதியானதாக அமைய வேண்டும்.

அந்தந்த மாவட்டங்களில் உள்ள காணிகள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள மக்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் பண்டா செல்வா ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது இந்த நிலைமை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்திலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வலிகாமம் வடக்கு பலாலி உள்ளிட்ட வடக்கின் பல காணிகள் அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக உள்ளன. 1983 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இப்பகுதிகள் அதியுயர் பாதுகாப்பு வலயங்களுக்காக பெற்றுக் கொள்ளப்பட்ட வேளையில் குறித்த காணிகள் மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்ற உத்தரவாதம் வழங்கப்பட்டிருக்கின்றது.

தற்போது யுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் வழங்கப்பட்ட உறுதி மொழிகளின் பிரகாரம் அந்தக் காணிகளை உரியவர்களிடம் ஒப்படைக்க முடியும். பாதுகாப்புத் தேவை கருதிய வகையிலான காணிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளை மக்களிடத்தில் ஒப்படைக்க முடியும். எனினும் அதனை அரசினால் மேற்கொள்வதற்கு ஏன் முடியாதிருக்கின்றது.

பாதுகாப்பு அமைச்சு இது தொடர்பில் திட்டங்களை அமைக்க வேண்டியுள்ளது. அவ்வாறு நடைபெறுமானால் அங்குள்ள 80 வீதமான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்துவிடும்.

இதேவேளை அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தல்களின் போது வெற்றி பெற்ற சபைகளின் மேயர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்று கடமைகளையும் பொறுப் பேற்றுள்ளனர்.

எனினும் கொழும்பு மாநகர சபைக்கான மேயர் தெரிவு செய்யப்பட்டுள்ள போதிலும் சபையை அரசு இன்னும் கொடுக்கவில்லை. இவ்வாறான நிலையில் வடமாகாண சபைத் தேர்தலைப் பற்றி அரசு பேசுவதில் என்ன பயன் என்றும் கேள்வியெழுப்பினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply