கூட்டமைப்பை அமெரிக்கா அழைத்தது எதற்காக?
போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அரசாங்கம் அறிவித்து சுமார் இரண்டரை வருடங்கள் கடந்துள்ள போதிலும் அடிப்படைப் பிரச்சினை இன்னமும் தீர்க்கப்படவில்லை. தீர்வுக்காக பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளபோதிலும் இதுவரை எந்தவொரு தீர்வும் இல்லை. அதேபோல போரால் பாதிக்கப்பட்டவர்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பக்கூடிய நிலையும் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை.
இந்நிலையில் முடியுமானவரை பேச்சுவார்த்தை மூலம் நாம் உரிய தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கையுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை காலமும் இந்தியா உடனேயே ஈழத்தமிழர்கள் தொடர்பாக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வந்தது.
இந்நிலையில் தமிழர்கள் தொடர்பிலான பேச்சுவார்த்தைக்கு கூட்டமைப்பு அமெரிக்கா செல்வது இதுவே முதற் தடவையாகும் என்பதுடன் முக்கியத்துவம் வாய்ந்த விஜயமொன்றாகவும் கருதப்படுகின்றது.
இதுவரை இந்தியாவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உரிய தீர்வு கிடைக்காமையினாலேயே கூட்டமைப்பு அமெரிக்கா செல்கின்றது என்று கருதி விடமுடியாது. ஏனெனில் அமெரிக்காவின் அழைப்பின் பேரிலேயே கூட்டமைப்பு இப்போது வாஷிங்டன் சென்றுள்ளது.
இதில் முக்கியமான விடயம், இவர்கள் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டனை சந்திப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருப்பது தான்.
இந்தப் பேச்சுவார்ததையின்போதாவது தமிழர்கள் எதிர்பார்த்தளவு வெற்றி கிடைக்குமா? என்பது பலரது எதரிப்பார்ப்பாக உள்ளது. ஹிலாரி கிளின்டன் அமெரிக்காவில் ஜனாதிபதி ஒபாமாவுக்கு அடுத்ததாக அதிகாரங்களைக் கொண்டவர். அவ்வாறான ஒருவரைச் சந்திப்பதற்கு கூட்டமைப்பினருக்கு சந்தர்ப்பம் கிடைத்தால் அது முக்கியமான ஒன்றாகும்.
கடந்த மாதம் இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான வெளிவிவகார அமைச்சர் றொபேர்ட் ஓ பிளேக், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உட்பட அரசாங்க அமைச்சர்கள் எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் சந்தித்து விட்டுச் சென்றார்.
இந்த விஜயத்தின்போது கொழும்பு வந்த இவரை முதன் முறையாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரே சந்தித்தனர். அது மட்டுமா? சுமார் ஒரு மணித்தியாலத்துக்கு மேலாக பேச்சுவார்தையையும் மேற்கொண்டனர். இந்தப் பேச்சு வார்த்தையின்போது, தற்போது வடபகுதி மக்கள் எதிர்நோக்கும் விடயங்கள் தொடர்பில் மட்டுமன்றி அரசியல் தீர்வு தொடர்பாகவும் பேசப்பட்டது.
பிரச்சினைகளை கேட்டறிந்த ரொபர்ட், கூட்டமைப்புக்கு அமெரிக்க வருமாறு அழைப்பு விடுத்துச் சென்றிருந்தார். இந்த அழைப்பினையடுத்தே கூட்டமைப்பினர் இன்று அமெரிக்காவிற்குச் செல்கின்றனர்.
அரசியல் அரங்கத்தில் இந்த விஜயம் முக்கியத்துவம் பெற்றிருந்தாலும் தமிழர்களின் பிரச்சினை தொடர்பில் இது எவ்வாறான தீர்ப்பை பெற்றுக் கொடுக்கும் என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இலங்கை அரசுக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச நாடுகளின் அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையில் கூட்டமைப்பின் அமெரிக்க பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகவே கருதப்படுகின்றது.
இந்நிலையில் கூட்டமைப்பின் அமெரிக்க விஜயம் தொடர்பில் அரசாங்க அமைச்சர்கள் மற்றும் இனவாதத் தலைவர்கள் சிலர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். கூட்டமைப்பின் விஜயம் இலங்கையை காட்டி கொடுக்கும் ஒரு தேசத்துரோக செயல் என அரசாங்க அமைச்சரொருவர் நேற்று குறிப்பிட்டிருந்தார்.
சிங்கள இனவாதத்தை முன்னெடுக்கும் பிரதான அமைப்பான தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர, த.தே.கூட்டமைப்பு அமெரிக்காவுடன் அரசியல் தீர்வு குறித்துப் பேசுவது தேசத்துரோக செயலாகும் எனக் குற்றஞ்சாட்டியிருப்பது கவனிக்கத்தக்கது.
விடுதலைப் புலிகள் வலுவாக இருந்த காலத்தில் பிரபாகரன்தான் எம்மைக் காத்து நிற்கும் கடவுள், பிரபாகரன் மட்டும் இல்லாதிருந்தால் நாம் எப்போதோ சர்வதேச சதிக்குப் பலியாகியிருப்போம் என்று அவர் முன்னர் குறிப்பிட்டிருந்தார் என்பது வேறு கதை.
கூட்டமைப்பு அமெரிக்காவிற்குச் செல்வது தொடர்பான செய்திகள் ஏற்கனவே வெளியாகியிருந்தாலும் அவர்களது அமெரிக்க நிகழ்ச்சி நிரல் தொடர்பான செய்திகள் ஏதும் இதுவரை கசியவில்லை.
அமெரிக்க அழைப்பின் பின்னணி என்னவாக இருக்க முடியும்? சர்வதேச சூழலில், இலங்கைக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுக்கள் அதிகரித்துவரும் நிலையில், அமெரிக் உயர்மட்டச் சந்திப்பு எந்தளவு முக்கியத்துமுடையதாக அமையக் கூடும் எனப் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
ஆனால் எதிர்பார்புகள் எவ்வாறு அமையும் என்பது சற்று சிந்திக்க வேண்டிதொன்றாகும். போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விடயங்களை விட்டுவிட்டு, பிரச்சினைக்கான தீர்வில் கரிசனை கொள்ளுமாறு கூட்டமைப்பிடம் அமெரிக்கா சொல்லக் கூடுமென்ற கருத்து ஒன்றும் உள்ளது.
போர்க் குற்றச்சாட்டுக்கள் என்பது ஒரு சர்வதேசப் பிரச்சினை அதனை சர்வதேசம் பார்த்துக் கொள்ளும் என்பதுதான் இதற்குப் பின்னாலுள்ள வாதம். எனவே த.தே.கூட்டமைப்பின் பொறுப்பு, கிடைத்திருக்கும் வாய்ப்புக்களைப் பயன்படுத்தி, பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வொன்றைக் காணும் வகையில் அமைந்திருக்க வேண்டும் என்பது இன்னொரு வாதம்.
உண்மையில் த.தே.கூட்டமைப்பின் எதிர்பார்ப்பு இந்தியாவேயொழிய அமெரிக்கா அல்ல. கூட்டமைப்பு, இந்திய ஆலோசனையில்லாமல் அமெரிக்காவிற்குச் செல்லவுமில்லை, செல்லவும் முடியாது.
கொழும்பின் மீது அதிக அழுத்தங்களை பிரயோகிக்கக் கூடிய நிலையில் இந்தியா இல்லை. அவ்வாறு அழுத்தங்களை பிரயோகிக்க முற்பட்டால், அதுவே கொழும்பு சீனாவுடன் அதிகம் நெருங்குவதற்கான வாய்ப்பாகவும் அமைந்துவிடும்.
இந்தப் பிரச்சினைகளைக் கருத்திற் கொண்டுதான் தற்போது இந்தியாவின் இடத்தை அமெரிக்கா எடுத்துக்கொண்டுள்ளது. ஆனால், அனைத்தும் இந்தியாவின் மேற்பார்வையில்தான் அரங்கேறி வருகின்றது.
அமெரிக்கா செல்லும் கூட்டமைப்பு சுயநிர்ணய உரிமையையும் தமிழ் தேசத்தின் தனித்துவமான இறைமையையும் ஆணித்தரமாக வலியுறுத்த வேண்டும். தமிழ் மக்களும் இளைஞர்களும் செய்த உயிர்த்தியாகங்களை பேரம்பேசும் வகையில் போர்க் குற்ற விசாரணையை சமரசம் செய்ய இடமளிக்கக் கூடாது என்று தமிழ்த்தேசிய முன்னணி தெரிவித்துள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டும்.
தமிழ் மக்களால் தமது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் உத்தியோகபூர்வ அழைப்பு விடுத்து அமெரிக்காவுக்கு அழைத்துள்ளமை தமிழ் மக்களுக்கு கிடைத்துள்ள மிகப் பெரியதொரு அங்கீகாரமாகும்.
அவ்வாறு அழைக்கப்பட்டமையானது தமிழ்த் தரப்பை ஒரு தனித்தரப்பாக அங்கீகரிக்கும் செயற்பாடாகவும் அமைந்துள்ளது என்றும் மேற்படி முன்னணி அறிவித்தள்ளமையும் சுட்டிக்காட்டப்பட வேண்டியது அவசியம்.
இந்தப் பின்னணியில் இன்று அதிகாலை வாஷிங்டன் புறப்பட்டுள்ள கூட்டமைப்பின் தலைவர்கள் எவ்வாறான பெறுபேறுகளைக் கொண்டுவருகின்றார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply