இராணுவ நடவடிக்கை பற்றி அமெரிக்காவுக்கு இலங்கை விளக்கம்

வடக்கில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர் மேற்கொண்டுவரும் படை நடவடிக்கைகள் பற்றியும் விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் பற்றியும் இலங்கை, அமெரிக்காவுக்கு விளக்கமளித்துள்ளது.
 
அண்மையில் அமெரிக்காவுக்குச் சென்றிருந்த இலங்கையின் பிரதி வெளிவிவகார அமைச்சர் குசைன் பைலா தலைமையிலான குழுவினர், ஆசிய, தெற்காசிய பிராந்தியத்திற்கான அமெரிக்காவின் பிரதி ராஜாங்கச் செயலாளர் ரிச்சட் பௌச்சரைச் சந்தித்து இராணுவ நடவடிக்கை பற்றி விளக்களித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து வவுனியாவுக்கு வரும் பொதுமக்களை தங்கவைப்பதற்கான ஏற்பாடுகளை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ளபோதிலும், விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனிதக் கேடையங்களாகப் பயன்படுத்துவது மட்டுமன்றி, அவர்கள் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருவதை தடுப்பதாக பிரதியமைச்சர் இச்சந்திப்பில் கூறியிருந்தார்.
 
வன்னி பிரதேசத்தில் தற்போது காணப்படும் மோசமான காலநிலை மற்றும் விடுதலைப் புலிகளால் அங்கு வைக்கப்பட்டிருக்கும் பொறிகளையும் பொருட்படுத்தாது மோதல்கள் நடைபெற்றுவரும் பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்குத் தேவையான உணவினையும் அத்தியாவசியப் பொருட்களையும் அரசாங்கம் தடையின்றி விநியோகித்து வருவதாக பிரதியமைச்சர் குசைன் பைலா, ரிச்சட் பௌச்சருக்கு எடுத்துக் கூறியுள்ளார்.
 
சர்வதேச சமூகம் விடுதலைப் புலிகளுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் பொதுமக்களுக்கு உதவ முடியும் என இந்தச் சந்திப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகவும் வெளிவிவகார அமைச்சு திங்கள்கிழமை விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் இராணுவ நடவடிக்கைகளின் வெற்றிகரமான முடிவடையும்போது, கிழக்கு மாகாணம் விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட பின்னர் அங்கு மேற்கொள்ளப்பட்டுவரும் ஜனநாயக நடவடிக்கைகளைப்போன்று, வடக்கிலுள்ள பொதுமக்களும் தங்கள் அரசியல் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்வதற்கான ஜனநாயக உரிமை வழங்கப்படும் எனவும் இலங்கையின் பிரதி வெளிவிவகார அமைச்சர் குசைன் பைலா கூறியுள்ளார்.
 
அத்துடன் விடுதலைப் புலிகளிடமிருந்து கிழக்கு மாகாணம் விடுவிக்கப்பட்டதன் பின்னர் அங்கு மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாகவும் இப் பிரதேசத்தில் சட்ட ஒழுங்கினை மேம்படுத்துவதற்குத் தேவையான புதிய பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், தமிழ் பேசும் பொலிஸ் அதிகாரிகள் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குசைன் பைலா அமெரிக்காவுக்கு விளக்கமளித்துள்ளார்.
 
முக்கியமாக யுனிசெப் அமைப்பிற்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் கிழக்கு மாகாணத்தில் அண்மைக்கால அபிவிருத்தியெனவும் பிரதியமைச்சர் குசைன் பைலா, ரிச்சட் பௌச்சரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இலங்கை விவகாரம் தொடர்பாக ஆசிய மற்றும் தெற்காசிய பிராந்தியத்திற்கான அமெரிக்காவின் பிரதி ராஜாங்கச் செயலாளர் ரிச்சட் பௌச்சர் கொண்டுள்ள அக்கறை குறித்து நன்றி தெரிவித்துள்ள பிரதியமைச்சர் குசைன் பைலா உலக வங்கியின் முக்கிய பிரமுகர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கிழக்கு மாகாண அபிவிருத்தியை கருத்திற்கொண்டு அரசாங்கம் செயற்பட்டுவருவதாகவும், இலங்கையில் மூன்று இன மக்களும் இணைந்து வாழும் கிழக்கு மாகாணம் மோதல்களின் பின்னரான அபிவிருத்தி நடவடிக்கைகளில் முன்மாதிரியான மாகாணமென இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
 
விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் காரணமாக கடந்த காலங்களில் வட பிராந்தியத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லையெனத் தெரிவித்துள்ள பிதியமைச்சர், இப் பிரதேசத்தில் அபிவிருத்தி திட்டங்களை அமுல்ப்படுத்துவதென்பது பயங்கரவாதத்திற்கு எதிரான ஒரு நடவடிக்கையாக அமையும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply