ஆறு நாடுகளின் எம்.பிக்கள் யாழ். சென்று நேரில் ஆராய்வு
வெளிநாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்று நேற்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து வடபகுதி மக்களின் வாழ்வாதார நிலைமைகளை நேரில் ஆராய்ந்தது. வடக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள், வீடமைப்புத்திட்டம், மீள் குடியேற்றம், கண்ணி வெடி அகற்றல் அடங்கலான பல்வேறு விடயங்கள் குறித்து மேற்படி குழு ஆராய்ந்ததாக யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.
இந்திய காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன், பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஜெரோஜ் பேக்கிஸ, தென் ஆபிரிக்க பாராளுமன்ற உறுப்பினர் நிர்பார் சவுத்ரிமேரி, பங்களாதேஷ் எம்.பி. அஜிஸ் சஜிசீன், நியூசிலாந்து எம்.பி. அஷ்ரப் செளத்ரி அடங்கலான குழுவே நேற்று யாழ். விஜயம் செய்தது.
இவர்கள் யாழ். அரச அதிபரை யாழ். மாவட்ட செயலகத்தில் சந்தித்து பேச்சு நடத்தினர். இதன் போது யாழ் மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்ட மக்களின் நிலைமை, கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கை மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் பற்றி அரச அதிபர் எம்.பிக்கள் குழுவுக்கு விளக்கமளித்தார். வெளிநாட்டு பாராளுமன்ற எம்.பிமார் குழு, பெண்கள் அமைப்பு பிரதிநிதிகள் அபிவிருத்தி செயற்பாடுகளுடன் தொடர்புடைய அமைப்புகள் என்பவற்றையும் சந்தித்து பேசியது.
இவர்கள் தெல்லிப்பளையில் மிதிவெடி அகற்றும் நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டதோடு யாழ். குடாவில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள், மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வாழ்வாதார நிலைமைகள் பற்றி நேரில் அவதானித்தனர். இவர்கள் வவுனியா பகுதிக்கும் சென்றும் அங்குள்ள நிலைமைகளை பார்வையிட்டனர்.
இக்குழுவினர் இன்று கொழும்பில் நடைபெற உள்ள சர்வதேச பாராளுமன்ற உறுப்பினர்களின் பேரவையின் போது வடக்கின் நிலைமை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக வெளிநாட்டு எம்.பி. குழு பிரதிநிதி ஒருவர் கூறினார்.
இது இவ்விதமிருக்க உலக பாராளுமன்ற உறுப்பினர்களின் பேரவை மாநாடு இன்று கொழும்பில் நடைபெறுகின்றது. மூன்று தசாப்தங்களாக நிலவிய பயங்கரவாதத்தை வெற்றிகொண்ட அனுபவங்களை சர்வதேச நாடுகளுக்குத் தெரியப்படுத்துவதற்கு சிறந்த சந்தர்ப்பமாக உலக பாராளுமன்ற உறுப்பினர்களின் பேரவை மாநாடு அமையுமென பேரவையின் தலைவரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
உலக பாராளுமன்ற உறுப்பினர்கள் பேரவையின் 33வது மாநாடு இன்று 28ம் திகதி கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெறவுள்ளது. நாற்பது நாடுகளைச் சேர்ந்த 110 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் இம் மாநாட்டை சபாநாயகர் சமல் ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கவுள்ளார்.
இம் மாநாட்டு நிகழ்வுகள் சம்பந்தமாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா விளக்குகையில் :
ஆளுங்கட்சி, எதிர்க் கட்சி என்ற பேதமில்லாமல் சகல பாராளுமன்ற உறுப்பினர்களையும் உள்ளடக்குவதாக உலக பாராளுமன்ற உறுப்பினர்களின் பேரவை திகழ்கிறது.
நாடுகளின் ஐக்கியம், மனித உரிமை, பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம், வர்த்தகம் மற்றும் முதலீட்டு நடவடிக்கைகள் தொடர்பில் இப்பேரவையில் சிறந்த தீர்வுகளும் ஆலோசனைகளும் இம் மாநாட்டில் முன்வைக்கப்படும்.
இத்துறைகளின் மேம்பாட்டிற்கு இத்தகைய மாநாடு வழிவகுப்பதுடன், நாடுகளுக்கிடையிலான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு இது சிறந்த சந்தர்ப்பமாக அமையும்.
கடந்த 32 ஆவது மாநாடு துருக்கியில் நடைபெற்ற போது முக்கியமான பல விடயங்கள் பற்றி அதில் ஆராயப்பட்டன. இப்பேரவையில் நான் தலைவராகவும் பிரதித் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்கவும் பதவி வகிக்கின்றோம்.
பொருளாளர் போன்ற பதவிகளை எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் திலங்க சுமதிபால, ஏர்ள் குணசேகர போன்றவர்கள் வகிக்கின்றனர்.
மோதல்களைத் தடுப்பதற்கான தீர்வுகள், நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கியமான துறைகளிலுள்ள பிரச்சினைகள் சவால்கள் தொடர்பில் பாராளுமன்றங்களினூடாக எவ்வாறு தீர்வு காண்பது என்ற தொனிப்பொருளில் இம்முறை மாநாடு அமையவுள்ளது.
இலங்கையில் பயங்கரவாதத்தைத் தோல்வியுறச் செய்த அனுபவங்களை சர்வதேசத்துடன் பகிர்ந்து கொள்வதற்கும் சர்வதேச ரீதியில் இலங்கை தொடர்பாக நிலவும் தவறான அபிப்பிராயங்களை சரிசெய்யவும் இம்மாநாடு சிறந்த வாய்ப்பாக அமையும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த ஜோன் அமரதுங்க எம்.பி. இம் மாநாட்டிற்கு எதிர்க்கட்சி பூரண ஆதரவை வழங்கும் என தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply