சுதந்திரமான விசாரணைக்கு பிரித்தானியா வலியுறுத்தல்
அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெற்றுவரும் பொதுநலவாய நாடுகளின் 22வது உச்சி மாநாட்டில் மனித உரிமைகள் பற்றிய விவகாரம் முக்கிய இடம்பிடித்திருந்தது. மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உத்தரவாதப்படுத்துவதற்கான கட்டமைப்பொன்றை உருவாக்க உலகின் பலநாடுகளின் தலைவர்களும் முன்வைத்த யோசனைகள் இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோன், மனித உரிமைகள் பாதுகாப்பு விவகாரத்தில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மனித உரிமைகளுக்கான அடிப்படை மூலதர்மங்களை உறுதிப்படுத்துவதற்கான வேலைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் கமரோன் சுட்டிக்காட்டியிருந்தார்.
இன்னும் இரண்டு ஆண்டுகளில் அடுத்த பொதுநலவாய உச்சிமாநாட்டை நடத்தவுள்ள இலங்கையின் மனித உரிமைகள் பற்றிய விவகாரமும் இம்முறை மாநாட்டின் பேச்சுக்களில் அடிபட்டன.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரசு நடத்திய போரில் போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், இலங்கை மனித உரிமைகள் விவகாரத்தில் முக்கிய சீரமைப்புகளை செய்யாவிட்டால், அங்கு 2013இல் நடக்கவுள்ள மாநாட்டை பகிஷ்கரிக்கப் போவதாக கனடிய பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர் ஏற்கனவே அறிவித்துவிட்டார்.
இந்தப் பின்னணியில், இலங்கைப் பற்றி கேட்கப்பட்ட போது பதிலளித்துள்ள பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோன், இலங்கையில் என்னதான் நடந்தது, போர்க்குற்றங்கள் நடந்தனவா, அவற்றுக்கு யார் பொறுப்புக்கூற வேண்டும் என்பவற்றை முழுமையாகக் கண்டறிவதற்காக முறையான, சுயாதீனமான, விசாரணை நடைமுறைகள் அவசியம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, பிரித்தானியாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் சேர் மல்கொம் ரிஃப்கின் உட்பட பொதுநலவாய நாடுகளின் முக்கிய பிரமுகர்களை உள்ளடக்கிய குழுவொன்று, கொமன்வெல்த் நாடுகள் எதிர்நோக்கியுள்ள சவால்கள் பற்றி ஆராய்ந்து 100க்கும் அதிகமான பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.
பொதுநலவாய நாடுகள் அமைப்பு 21ம் நூற்றாண்டு உலகுக்கு பொருத்தமாக அமைய வேண்டும் என்ற கோரிக்கை இந்த முயற்சியில் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, உரிமைகள் மற்றும் சுதந்திரம் தொடர்பான புதிய சமவாயம் ஒன்றை உருவாக்குவது பற்றியும் டேவிட் கமரோன் கருத்து வெளியிட்டுள்ளார்.
இதுதவிர இன்னும் சர்ச்சைக்குரிய விவகாரமாக, மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி பற்றிய சுயாதீனமான ஆணையர் ஒருவரை நியமிப்பது பற்றியும், ஒருபால் உறவு திருமணங்களை தடைசெய்யும் சட்டங்களை நாடுகள் நீக்கவேண்டும் என்ற கோரிக்கை தொடர்பிலும் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்று கோரி பேர்த் நகரில் தமிழர் அமைப்பகள் போராட்டங்களை நடத்தியுள்ளன.
இலங்கைப் போரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதாகவும் படையினரால் போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டதாகவும் காட்டும் படங்களையும் பதாகைகளையும் தாங்கிய ஆர்ப்பாட்டக்காரர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
ஆனால், தன்மீதான போர்க்குற்றங்களை மறுத்துவரும் இலங்கை அரசு, சர்வதேச ரீதியான, சுதந்திரமான விசாரணைகள் தேவையில்லையென்றும் கூறிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply