தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இதய சுத்தியுடன் செயற்பட்டார்களானால் ஏதேனும் நன்மைகள் கிடைக்க வாய்ப்பு உண்டு : தயாசிறி ஜயசேகர

யுத்தம் முடிந்து ஏறக்குறைய இரண்டரை வருடங்களாகிவிட்டன. ஆனால் மக்களின் சுதந்திரம் பெருமளவில் குறைந்துவிட்டது. போர் முடிந்தபின் நாட்டில் சமாதானம் நிலவும், மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள், ஒற்றுமையாக வாழ்வார்கள் தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்றெல்லாம் நாம் எதிர்பார்த்தோம், நாட்டு மக்கள் எதிர்பார்த்தார்கள்.

ஆனால் அப்படியெல்லாம் ஒன்றுமே நடக்கவில்லை. மாறாக தமிழ் மக்கள் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். பொலிசார் செய்ய வேண்டிய கடமைகளை இன்று இராணுவமே செய்து வருகின்றது. ஆயுதபாணிகளான இராணுவத்திற்கு பதில் இன்று குண்டாந்தடி இராணுவம் ஆட்சி புரிகின்றது. இந்நிலை வடபகுதி இளைஞர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாகியுள்ளது.

தமிழ் மக்கள் விரும்பும்படியல்லாது அரசு விரும்பும்படி தமிழ் மக்களை ஆள அரசு முயற்சிக்கின்றது. தீர்வுக்கான பேச்சுவார்த்தையை எவ்வித காரணமுமேயின்றி வெறுமனே இழுத்தடித்துக் கொண்டிருக்கின்றது.

எதிர்கட்சிகளால் இன்று இந்நாட்டில் நிம்மதியாக இருக்க முடியவில்லை. போதைப்பொருள் முதலாளிகள் மற்றும் பாதாள உலகத்தினரின் அடக்குமுறை எங்ஙனம் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றது. நாட்டில் ஜனநாயகம் செத்துவிட்டது. வடக்கில் போலவே இன்று தெற்கிலும் அடக்குமுறை பிரயோகிக்கப்படுகின்றது.

பெப்ரவரி மாதத்தில் என் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இன்றைய தினம் வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நாட்டில் சட்டமும் ஒழுங்கும் சீர் குலைந்துவிட்டது என்பதற்கு இதைவிட என்ன சாட்சி வேண்டும்?

நாட்டில் நிலவும் இத்தகைய சூழ்நிலைகளின் காரணமாகத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் அமெரிக்கா சென்று தமது பிரச்சினையைக் கூறத் தலைப்பட்டிருக்கின்றார்கள். அவர்கள் அந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். சர்வதேச சமூகத்தின் உதவியை நாடுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியேதும் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே இந்தச் சூழ்நிலையில் தமது பிரச்சினை குறித்து பேசுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நியாயமானதெனவே கருதுகின்றேன்.

பான்கீன் மூனோ, தருஷ்மனோ வேறும் சர்வதேச அமைப்புக்களோ இலங்கை விவகாரத்தில் தலையிடுவதற்கு வழி சமைத்துள்ளவர்கள் இன்றைய ஜனாதிபதியும் அரசுமே என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.

எல்லாவற்றிற்கும் மேலாக இவ்வாறு சர்வதேச சமூகத்தின் உதவியை நாடுவதற்கு முன்னுதாரணமாகவும், வழிகாட்டியாகவும் இருந்தவர் இன்றைய ஜனாதிபதியே. இவர் 1988 89 காலப்பகுதியில் வாசுதேவ நாணயக்காரவுடன் இணைந்து ஜெனீவா சென்று இலங்கைக்கு உதவிவழங்க வேண்டாமென உலகநாடுகளை கேட்டுக்கொண்டார். இந்த விடயம் அவராலேயே நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு “ஹன்சார்டி’லும் இடம் பெற்றுள்ளது.

இன்று த.தே.கூ.யினர் சர்வதேச சமூகத்துடன் இணைந்து சதிபுரிகிறார்கள் என அரசு தரப்பில் சொல்லப்படுகின்றது. அப்படியானால் அன்று சென்று தமது பிரச்சினைகள் குறித்து ஜெனீவாவில் பேசியதும் சர்வதேச சதியாக வேண்டும். அன்றைக்கு அது சர்வதேச சதியாகாவிட்டால் இன்றைக்கு த.தே.கூ.யினர் அமெரிக்கா சென்று பேசுவது மட்டும் எவ்வாறு சர்வதேச சதியாகும்?

சர்வதேச சமூகம் உள்நாட்டுப் பிரச்சினைகளில் தலையிடுவது பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதும் ஒரு வகையில் உண்மையே. இத்தகைய விவகாரங்கள் முறையாகவும் மிகுந்த இராஜதந்திரத்துடனும் கையாளப்பட வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் அமெரிக்கப் பயணத்தினால் கிடைக்கக்கூடிய பயன்கள் என்னவென்பதைப் பற்றி என்னால் திட்டவட்டமாக ஏதும் கூறமுடியாது.
ஆனால் ஒன்று மாத்திரம் உறுதியாகக் கூறுவேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புலிகளின் கைப்பொம்மையாக செயற்படாமல் இதய சுத்தியுடன் செயற்பட்டார்களானால் ஏதேனும் நன்மைகள் கிடைக்க வாய்ப்பு உண்டு.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply