பான் கீ-மூன்-கூட்டமைப்பு சந்திப்பு நடைபெறும் சாத்தியம் ஏதுமில்லை : சவேந்திர சில்வா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீமூனைச் சந்திப்பதற்கான எந்த வாய்ப்புக் களுமில்லை. ஐக்கிய நாடுகள் சபை வரை அவர்கள் செல்லக்கூடும். ஆனால் ஐ.நா. செயலரைச் சந்திக்கமாட்டார்கள். எங்களுக்குத் தெரியாமல் அவர்களின் சந்திப்பு இடம் பெற அறவே வாய்ப்பு இல்லை.

இவ்வாறு நேற்றுத் திட்டவட்டமாகக் கூறினார் ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அமெரிக்கப் பயணம் மற்றும் ஐ.நா. செயலரை கூட்டமைப்பினர் சந்திப்பது குறித்து பத்திரிகையான சுடர் ஒளிக்கு தொலைபேசி மூலம் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார். கூட்டமைப்பினரின் அமெரிக்கப் பயணம் தொடர்பில் அரசு அலட்டிக்கொள்ளவில்லை என்றும் கூறினார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஐ.நா. செயலரைச் சந்திக்கமாட்டார்கள் என்பதை நான் உங்களுக்கு உறுதியாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். ஐ.நாவில் அவர்கள் செயலாளர் நாயகத்தை சந்திப்பதாக இருந்தால் அது தொடர்பான தகவல் எமக்குக் கிடைத்திருக்கும். ஆனால் அப்படி எந்தத் தகவலும் எமக்குக் கிடைக்கவில்லை.நாடாளுமன்றத்தைப் பார்க்க செல்லும் ஒருவர் நாடாளுமன்றத்தை வேண்டுமானால் பார்த்துவிட்டு வரலாம். ஆனால் சபாநாயகரை பார்த்தேன் என்று சொல்ல முடியுமா? அதுபோல, கூட்டமைப்பினர் ஐ.நாவின் முக்கிய அதிகாரிகளைச் சந்தித்துபேசக்கூடும். ஆனால் செயலாளரைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் கிடையா.இன்னொன்றையும் கூறவிரும்புகின்றேன். தமிழக் கூட்டமைப்பினர் எவரைச் சந்தித்தாலும் எமக்குப் பிரச்சினையில்லை. ஐ.நாவில் அங்கம் வகிக்கும் ஒரு நாடு இலங்கை. எனவே இப்படியான கட்சிகளின் செயற்பாடுகள் அல்லது முயற்சிகள் எந்த விதத்திலும் எம்மைப் பாதிக்கப் போவதில்லை. இவ்வாறு தெரிவித்தார் சவேந்திர சில்வா.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply