நீதிபதிகள் என்ன அடிமைகளா?: சரத் சில்வா விசனம்

இலங்கை அரசாங்கம் நீதித்துறையை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டின் முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என்.சில்வா தெரிவித்துள்ளார்.தன் மீதான விசாரணைக்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் எடுத்துள்ள முயற்சி அரசியல் ரீதியான பழிவாங்கல் எனவும் சரத் என்.சில்வா ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இன்று ஞாயிற்றுக் கிழமை கூறியுள்ளார்.
ஓய்வுபெற்ற தலைமை நீதியரசர் சரத் என். சில்வாவுக்கு எதிரான விசாரரணைகளை நடத்துவதற்கான நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்றை அமைக்குமாறு அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் மற்றும் இன்னும் பல ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் என 75 பேர் பிரேரணையொன்றின் ஊடாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷவை கோரியிருக்கின்றனர்.

முன்னாள் நீதியரசர் அவரது பதவிக்காலத்தில் அதிகாரத் துஷ்பிரயோகத்திலும், தவறான நடத்தைகளிலும் ஈடுபட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுக்களை விசாரிக்குமாறே ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறுகின்றனர்.

நாட்டின் தலைமை நீதியரசராக இருந்த சரத் என் சில்வா, நீதித்துறைக்கு களங்கம் ஏற்படுத்தியிருப்பதாகவும் நீதித்துறைச் சுதந்திரத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் பாதுகாக்கத் தவறிவிட்டதாகவும் அந்தப் பிரேரணையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.

அரசியல் பழிவாங்கல்?

இந்த நிலையில் இன்று ஊடகங்களுக்குப் பதிலளித்துள்ள சரத் என். சில்வா, கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளித்து, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைக்கு எதிராக குரல் கொடுத்ததாலேயே தன்னை மகிந்த அரசு பழிவாங்கப் பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

தான் முன்னர் வழங்கிய தீர்ப்புகளைக் கூட மாற்றியமைக்கும் விதத்தில் இந்த நாடாளுமன்றத் தெரிவுக்குழு பயன்படுத்தப்படக் கூடிய அபாயம் இருப்பதாகவும் சரத் என். சில்வா சுட்டிக்காட்டினார்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை அவரது அலரி மாளிகையில் சந்தித்துப் பேசியிருந்த முன்னாள் நீதிபதிகள் சிலர், சரத் என் சில்வா அவரது பதவிக்காலத்தில் நீதிபதிகளின் பதவி நீக்கம், பதவியுயர்வு போன்ற விடயங்களில் முறைகேடாக நடந்துகொண்டுள்ளதாக முறையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவை எதிர்த்துப் போட்டியிட்ட, தற்போது சிறையிலுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக சரத் என். சில்வா பிரச்சாரங்களை செய்திருந்தார்.

அதன் பின்னர், மகிந்த ஆட்சிக்கு எதிராக பகிரங்கமான விமர்சனங்களை அவ்வப்போது வெளியிட்டு வந்த அவர், எதிரணியிலுள்ள ஜேவிபி சார்பு நிகழ்வுகளிலும் அதிதியாக கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1999ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையான தனது பத்தாண்டு பதவிக் காலத்தில், அரசியல் ரீதியில் முக்கியத்துவம் மிக்க பல நிகழ்வுகளுக்கு பின்னணியாக இருக்கின்ற பல தீர்ப்புகளை முன்னாள் தலைமை நீதியரசர் சரத். என்.சில்வா வழங்கியிருந்தார்.

வடக்கு கிழக்கு பிராந்தியங்கள் மீண்டும் தனித்தனி மாகாணங்களாக பிரிக்கப்பட்டமை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் இரண்டாவது தவணை ஆட்சி ஒரு ஆண்டு முன்கூட்டியே முடிவடைந்தமை, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட ‘ஹெல்பிக் ஹம்பாந்தோட்டை’ வழக்கு விவகாரம், சந்திரிகா அரசு விடுதலைப் புலிகளுடன் செய்துகொண்ட பீ-டொம் என்கின்ற சர்வதேச சுனாமி உதவிகளை பங்கிடும் நடைமுறை செல்லாது என்று அறிவிக்கப்பட்டமை, ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் ஆளுங்கட்சிக்கு மாறியிருந்தாலும் அவர்கள் நாடாளுமன்ற பதவியை இழக்கமாட்டார்கள் என்ற சட்ட விளக்கம் போன்ற அரசியல் ரீதியில் திருப்பு முனைகளாக அமைந்த பல வழக்குகளில் தீர்ப்புகளை வழங்கியவர் சரத் என்.சில்வா என்பதும் குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply