தமிழருக்கு தீர்வை வழங்க அரசை நெருக்குகின்றது சர்வதேச சமூகம்; கனடாவில் சம்பந்தன் தெரிவிப்பு

இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வை வழங்க வேண்டிய கட்டாய நிலைக்கு இலங்கை அரசு தள்ளப்பட்டுள்ளது. தமிழ் மக்களுக்கு உரிய தீர்வை வழங்குமாறு சர்வதேசம் இலங்கைக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. இதை நாம் சாதகமாகப் பயன்படுத்தி தமிழ் மக்கள் தங்கள் வாழ்விடங்களில் சகல உரிமைகளுடன் வாழும் நிலையை ஏற்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

 இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கனடாவில் தெரிவித்தார்.
 கனடாவின் ஸ்காபுறோ நகரிலுள்ள ஐயப்பன் ஆலய மண்டபத்தில் நேற்றுமுன்தினம் மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 அவர் அங்கு தெரிவித்ததாவது:

 வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் உரிமைகள் பற்றி நாம் பேசுகின்ற போது, அங்கு வாழ்கின்ற முஸ்லிம் மக்களின் உரிமைகள் பற்றியும் நாம் அக்கறை கொண்டுள்ளோம். தமிழ் மக்களுக்கு நிகரான உரிமை பெற்றவர்களாக முஸ்லிம் மக்களும் வாழ வேண்டும் என்பதே எமது நோக்கம்.

 வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்விடம். எம்மண்ணில் நாம் வாழவும் அதனை ஆளவும் எமக்கு உரிமை உண்டு. ஆனால், அந்த உரிமையை வழங்காது அழித்தொழிக்க இலங்கை அரசு தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றது. எமது உரிமைகளைப் பெறுவதற்குச் சாதகமான சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டுள்ளது.

 ஏற்கனவே ஏற்பட்ட பல சந்தர்ப்பங்களை நாம் தவற விட்டுள்ளோம். அதனால், நிதானமாகச் சிந்தித்து செயற்பட வேண்டிய தருணம் இது.

சர்வதேசம் நமது பிரச்சினையைத் தீர்த்து வைக்க தயாராக உள்ள போது நமது நாட்டு ஜனாதிபதி அதற்கு விருப்பம் உள்ளவராகத் தெரியவில்லை.

 அவரது விரும்பத்தகாத நடவடிக்கைகளினால் அவர் பல இடங்களில் சங்கடமாக வேண்டியுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொண்ட கனேடிய பிரதமரின் புறக்கணிப்புக்கு மகிந்த ராஜபக்ஷ உள்ளாக வேண்டிய நிலை ஏற்பட்டது. இது அவருக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்.

கனேடியப் பிரதமர் ஏற்கனவே பல விண்ணப்பங்களை இலங்கை அரசுக்கும் அதன் ஜனாதிபதிக்கும் விடுத்துள்ளார். ஆனால் அவைகளுக்குத் தகுந்த பதில் வழங்காத மஹிந்த ராஜபக்ஷவின் உரைகளைத் தான் செவிமடுக்கப் போவதில்லை என்ற செய்தியையே கனேடியப் பிரதமர் வெளிப்படுத்தியுள்ளார்.

எனவே, இலங்கை அரசு உடனடியாக நமது தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க வேண்டிய ஒரு கடப்பாடு உள்ளது.

 எமது போராட்டம் நியாயமானது. மனித உரிமையைக் கடைப்பிடிப்பது இலங்கை அர_க்கு மாத்திரமல்ல, சர்வதேச சமூகத்துக்குமே உரியதாகும்.

எமது நாட்டில் மனித உரிமை மீறப்பட்டதா? சர்வதேச மனிதாபிமானச் சட்டம் மீறப்பட்டதா என்பது பற்றி நாம் அது சம்பந்தமான ஆவணங்களை அனுப்பி சர்வதேச சமூகத்துக்குமே விளக்கி வருகின்றோம்.

 அரசுடன் பேசி தீர்வு காணுமாறு இந்தியாவும் கூறியது. தற்போது அமெரிக்காவும் அதனையே கூறுகின்றது.

 கட்டாயத் தீர்வை வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் இலங்கை அரசுக்கு ஏற்பட்டுள்ளது. நாம் நிதானமாகச் செயற்பட வேண்டும். அதற்கு புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் உங்கள் அனைவரினதும் ஆதரவு வேண்டும்.

 நீங்கள் மீண்டும் அங்கு வரவேண்டும். சந்தர்ப்பம் ஏற்படும்போது அங்கு முதலீடுகளைச் செய்ய வேண்டும்.
 இப்படி சம்பந்தன் கூறினார்.

 மாவை சேனாதிராஜா மற்றும் சுமந்திரன் ஆகியோரும் நிகழ்வில் உரையாற்றினார்கள்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply