புலிகளுடன் இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்துவதை அமெரிக்கா ஆதரிக்காது
கிளிநொச்சி படையினரிடம் வீழ்ந்துள்ளமை இலங்கையின் 25 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்றுவரும் யுத்தவரலாற்றில் ஒரு முக்கியமான திருப்புமுனையாகும் என்றும் இது 25 வருடங்களுக்கும் மேலாக புரையோடிப்போயுள்ள மோதலுக்கு மிகவிரைவில் முற்றுப்புள்ளி வைக்குமென்றும் நேற்று கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 1997 ஆம் ஆண்டு முதல் ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக தடைசெய்யப்பட்டிருக்கும் புலிகளுடன் இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்துவதை அமெரிக்கா ஆதரிக்கவில்லையெனவும் எனினும் இலங்கையில் வாழ்கின்ற தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் ஆகிய எல்லா சமூகத்தினரதும் அபிலாஷைகளை உள்ளடக்கியவகையில் ஒரு அரசியல் தீர்வுத்திட்டத்தை முன்வைப்பதன் மூலம் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான வழிவகைகளை தற்போது இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளுமென்று அமெரிக்கா நம்புவதாகவும் அவ்வாறானதொரு அரசியல் தீர்வு முன்வைக்கப்படும்பட்சத்தில் அதில் ஏனைய தமிழ் தரப்பினர்கள் எல்லோருடைய கருத்துக்களும் பரவலாக உள்வாங்கப்படவேண்டியது அவசியமாகும் எனவும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி கைப்பற்றப்பட்டாலும், இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியாகவே தீர்வுகாணப்பட வேண்டுமென யப்பான், இந்தியா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
இதேவேளை, அனைத்து சமூகங்களினதும் சட்டரீதியான கோரிக்கைகளை நிறைவேற்றக் கூடிய வகையில் அரசியல் தீர்வொன்று முன்வைக்கப்படுவதே உடனடித்தேவையாக உள்ளது எனப் பிரித்தானியாவும் வலியுறுத்திக் கூறியுள்ளது.
கிளிநொச்சி மீட்கப்பட்டுள்ள சூழ்நிலையில் அரசியல் தீர்வொன்றை முன்வைப்பது மிகவும் அவசரமானதொன்று என பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் காலனித்துவ நாடுகளுக்கான அமைச்சர் லோர்ட் மலொக் பிரவுண் மற்றும் சர்வதேச அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் டக்ளஸ் அலெக்ஸான்டர் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
“அனைத்து தரப்பினரும் இணைந்து சகல சமூகங்களினதும் சட்டரீதியான கோரிக்கைகளை நிறைவேற்றக் கூடிய அரசியல் தீர்வொன்றை முன்வைப்பது மிகவும் அவசரமானது. இதன் மூலமே உறுதியான, நீடித்து நிலைக்கக் கூடிய சமாதானமொன்றை இலங்கை பெற்றுக்கொள்ளும்” என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் மனித உரிமை நிலைமைகளில் ஏற்படும் முன்னேற்றம் குறித்தும் தாம் கவனம் செலுத்தியிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கும் அவர்கள், மோதலில் ஈடுபட்டிருக்கும் இரண்டு தரப்பும் சர்வதேச சட்டங்களை மதிப்பதுடன், வன்னியிலுள்ள மக்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கு சம்பந்தப்பட்ட தரப்புக்கள் அனுமதியளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியில் மட்டும் தீர்வுகாணமுடியாதென இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனன் கூறியுள்ளார். “இராணுவ நடவடிக்கையில் எந்தவிதமான மாற்றங்கள் ஏற்பட்டாலும், இலங்கைப் பிரச்சினைக்கு இராணுவ ரீதியில் தீர்வில்லை” என அவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
பல்வேறு கோணங்களைக் கொண்ட இலங்கையின் இனப்பிரச்சினையில் இராணுவ நடவடிக்கையும் ஒன்றாக அமைந்துள்ள என சிவ்சங்கர் மேனன் சுட்டிக்காட்டினார்.
“ஒன்றுபட்ட இலங்கைக்குள் அனைத்து சமூகங்களும் நிறைவாக வழக்கூடிய நெறிமுறையொன்றை ஏற்படுத்துவதற்கான அரசியல் புரிந்துணர்வு ஏற்படுத்தப்படும்வரை அரசியல் தீர்வைப் பற்றி பேசமுடியாது” என இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஊடகவியலாளர்களிடம் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply