முன்னாள் பிரதம நீதியரசரையும் சிறைக்குள் தள்ள அரசு முயற்சி சரத் பொன்சேகா குற்றச்சாட்டு
முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வாவையும் தன்னைப் போன்று கூண்டுக்குள் தள்ள அரசு சூழ்ச்சி செய்து வருகிறது என வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா குற்றஞ்சாட்டியுள்ளார்.முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார நேற்றுமுன்தினம் வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்று பார்வையிட்டார். இதன்போதே சரத் பொன்சேகா மேற்கண்ட குற்றச்சாட்டை முன்வைத்தார் என பாலித ரங்கே பண்டார எம்.பி. நேற்று உதயனுக்குத் தெரிவித்தார்.
நீதிமன்றம் எந்தவித தலையீடும் இன்றி சுதந்திரமாக செயற்படும் என்றால் வெள்ளைக்கொடி வழக்குத் தீர்ப்பு வழங்கப்படும் தினமான எதிர்வரும் 18ம் திகதி நிச்சயம் தனக்கு விடுதலை கிடைக்கும் என்றும் சரத் பொன்சேகா தெரிவித்தார் என்று பண்டார எம்.பி. கூறினார்.
சர்வதேச மட்டத்தில் இலங்கை அரசு மீது அதிருப்தி ஏற்பட்டிருக்கின்ற நிலையில் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வாவை பழிவாங்குவதற்கு அரசு முயற்சித்து வருகின்றமை இலங்கை மீதுள்ள சர்வதேசத்தின் அதிருப்தியை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.
பெருந்தொகையிலான நிதியை செலவிட்டு அமைக்கப்பட்ட நுரைச்சோலை அனல் மின் நிலையத்திற்காக இன்று எரிபொருள் வீண்விரயம் செய்யும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் முன்னாள் பிரதம நீதியரசர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தி வருகிறது அரசு.
சிறந்த பிரதம நீதியரசர் என்ற சான்றிதழ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வாவுக்கு வழங்கப்பட்டது. இன்று ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான அரசு சரத் என்.சில்வாவுக்கு எதிராக நாடாளுமன்றத்தின் ஊடாக தெரிவுக்குழு ஒன்றை அமைக்க தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றது.
அரசுக்குச் சவாலாக இருந்த என்னை சிறையில் அடைத்ததுபோல, முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வாவையும் சிறையில் தள்ள அரசு முயற்சி செய்துவருகிறது.
இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தன்னிடம் கூறினார் என பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply