ஜெ.வுக்கு விலக்கு: உச்சநீதிமன்றம் மறுப்பு
சொத்துக்குவிப்பு வழக்கில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. ஆனால், சிறப்பு நீதிமன்ற உத்தரவுப்படி, வரும் 8-ம் தேதி ஆஜராக வேண்டியதில்லை என்று தெரிவித்துள்ளது.நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க ஏற்கெனவே உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டதை அடுத்து, கடந்த மாதம் 20 மற்றும் 21 தேதிகளில் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார் ஜெயலலிதா. அடுத்து, நவம்பர் 8-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு ஜெயலலிதாவிக்கு நீதிபதி மல்லிகார்ஜுனையா உத்தரவிட்டிருந்தார்.
இதனிடையே, மேலும் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி ஜெயலலிதா மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார். மீதமுள்ள கேள்விகளுக்கு எழுத்து மூலம் பதிலளிக்க அனுமதிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
ஜெயலலிதா தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் தல்வீர் பண்டாரி மற்றும் தீபக் மிஸ்ரா பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலலிதா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, கடந்த மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபடி, இரண்டு நாட்கள் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஆஜராகி, மொத்தமுள்ள 1537 கேள்விகளில், 857 கேள்விகளுக்கு பதிலளித்ததாகத் தெரிவித்தார்.
ஆனால், கர்நாடக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அனிதா ஷெனாய், 567 கேள்விகளுக்கு மட்டுமே ஜெயலலிதா பதிலளித்திருப்பதாகத் தெரிவித்தார்.
உங்களுக்காகத்தான் பாதுகாப்பு
ஜெயலலிதா நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக, 1500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகவும், அந்தப் பகுதியில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், அதனால், பொதுமக்கள், வழக்கறிஞர்கள் உள்பட பல்வேறு தரப்பினருக்கும் இடையூறு ஏற்படுவதாகவும் கூறினார்.
`நீங்கள் கேட்டுக் கொண்டதால்தானே பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அது உங்களுக்கு நல்லதுதானே. நீங்கள் ஏற்கெனவே இசட் பிளஸ் பாதுகாப்புப் பிரிவில் இருக்கிறீர்கள்’, என்று நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தார்கள்.
நேரில் ஆஜராக வேண்டுமானால், ஒரே நாளில் விசாரணையை முடிக்குமாறு உத்தரவிடுங்கள் என்று முகுல் ரோஹத்கி வலியுறுத்தினார்.
அவ்வாறு உத்தரவிட முடியாது என்று மறுத்த நீதிபதிகள், `நீங்கள் விசாரணைக்கு நேரில் ஆஜராகுங்கள். விரைவில் முடிக்குமாறு விசாரணை நீதிமன்றத்தைக் கேட்டுக் கொள்கிறோம்’ என்று தெரிவித்தார்கள்.
வரும் 8-ம் தேதி ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அன்று ஆஜராக முடியாது என்பதால், வேறு தேதியில் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்று முகுல் ரோஹத்கி கோரிக்கை விடுத்தார்.
`அது தொடர்பாக, விசாரணை நீதிமன்றத்தை அணுகி, உங்களுக்குள் பேசி முடிவு செய்யுங்கள். உங்கள் கோரிக்கையைப் பரிசீலிக்குமாறு அந்த நீதிமன்றத்தைக் கேட்டுக் கொள்கிறோம்’ என்று கூறிய நீதிபதிகள், விசாரணை ஒரு நாளில் முடியாவிட்டால், இரண்டாவது நாளில் முடித்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டார்கள்.
ஜெயலலிதாவுக்கு போதிய பாதுகாப்பு வழங்குமாறு கர்நாடக அரசுக்கும், மத்திய அரசுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டார்கள்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply