சீன நிறுவனத்துடன் இலங்கை அரசு புதிய ஒப்பந்தம்
இலங்கைக்கு போர் விமானங்களை விற்றுவந்த சீன அரசுக்குச் சொந்தமான நிறுவனமொன்றுடன் சிவில் கட்டுமான ஒப்பந்தமொன்றை இலங்கை அரசு செய்துகொண்டுள்ளது.முன்னதாக, இதே நிறுவனத்துடன் செய்துகொண்டிருந்த காணி விற்பனை ஒப்பந்தமொன்றை இலங்கை அரசாங்கம் வாபஸ் பெற்றுக் கொண்டிருந்ததால், அந்த நிறுவனம் வழக்கு போடலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையிலேயே இந்த புதிய ஒப்பந்தம் வழங்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
காட்டிக் என்கின்ற சீன தேசிய விமானத் தொழிநுட்ப இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கூட்டுத்தானம் என்பது இலங்கைக்கு போர் விமானங்களை ஏற்றுமதி செய்துவந்த சீன அரசுக்குச் சொந்தமான ஒரு நிறுவனம்.
இந்த நிறுவனத்துக்கு இராணுவ ரீதியான ஏற்றுமதி இறக்குமதிகளைத் தவிர வேறு வகையான வர்த்தக நோக்கங்களும் உள்ளன.
இப்போது தலைநகர் கொழும்புக்கு அருகே உள்ள பல்கலைக்கழகமொன்றின் துறையொன்றை இடமாற்றி, அபிவிருத்தி செய்வதற்கான, சுமார் 90 மில்லியன் டொலர்கள் பெறுமதியான ஒப்பந்தமொன்றை இந்த நிறுவனம் தன்வசமாக்கிக்கொண்டுள்ளது.
ஹொங்கொங் நிறுவனத்துடனான காணி விற்பனை ஒப்பந்தம் நிறைவேறியது கொழும்பிலுள்ள மிக பெறுமதி மிக்க, முக்கிய கடற்கரையோர காணியொன்றில் சுமார் 500 மில்லியன் டொலர்கள் பெறுமதியில் சொகுசு அடுக்குமாடி ஹோட்டல் தொகுதியொன்றைக் கட்டுவதற்கு முன்னர் இந்த நிறுவனத்துடன் செய்துகொள்ளப்பட்டிருந்த ஒப்பந்தமொன்றை இலங்கை அரசு 9 நாட்களுக்கு முன்னர் தான் வாபஸ் பெற்றிருந்தது.
இந்த பின்னணியிலேயே இந்த நிறுவனத்துடனான இந்தப் புதிய ஒப்பந்தத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
கடற்கரையோர காணியை முற்றுமுழுதாக விற்றுத்தீர்ப்பதற்கு முன்னர் உடன்பட்டிருந்த ஒப்பந்தத்தை அரசு அவசரமாக வாபஸ் பெற்றுக் கொண்டு விட்டது. – காணியை விற்க முடியாது, குத்தகைக்கு மட்டும் தான் கொடுக்க முடியும் என்று திடீரென காரணம் கூறப்பட்டுள்ளது.
ஆனால் அதற்கு அருகிலுள்ள காணியொன்றை விற்பது தொடர்பில் ஹொங்கொங்கிலிருந்து இயங்கும் ஷாங்கிரி-லா ஹொட்டேல் குருப் என்ற கம்பனியுடன் செய்து கொள்ளப்பட்டிருந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுவிட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
விமான நிலையமொன்று, துறைமுகமொன்று, ரயில்வே கட்டமைப்புகள் மற்றும் பெருந்தெருக்கள் என பல்வேறு நிர்மாண நடவடிக்கைகள் சீனாவின் கடனுதவியிலேயே தற்போது நடந்துவருகின்ற நிலையில், இந்த சீன அரச நிறுவனத்தை சற்று ஆசுவாசப்படுத்தி வைத்திருக்க வேண்டிய தேவையில் இலங்கை அரசு பெரும் நெருக்கடியை சந்தித்திருப்பதாகத் தான் தெரிகின்றது.
தலைநகரிலுள்ள முக்கிய பெறுமதி மிக்க கடற்கரையோரக் காணியை விற்கும் அரசின் ஒப்பந்தத்துக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சி பெரும் பிரசாரங்களில் ஈடுபட்டுவந்தது.
சீன நிறுவனங்களுடான இவ்வாறான ஒப்பந்தங்களால் அரசில் இருக்கும் முக்கிய புள்ளி ஒருவர் நன்மை அடைந்துவருவதாகவும் எதிரணியினர் குற்றஞ்சாட்டினர்.
ஆனால், வெளிநாட்டு முதலீடுகளை எதிரணியினர் தடுக்க முயல்வதாக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால், இலங்கையிலுள்ள சண்டே டைம்ஸ் பத்திரிகை, அரசாங்கம் ‘எவ்வித தெளிவான நியாயமான சிந்தனையுமின்றி வர்த்தக ரீதியான முடிவுகளை’ எடுத்துவருவதாகவும், அதனாலேய இலங்கையில் முதலீடுகளைச் செய்ய எவரும் அக்கறை செலுத்துவதில்லையென்றும் குற்றஞ்சாட்டியுள்ளது.
சீனித் தொழிற்சாலைக்குள் அரச ஆதரவாளர்கள் அதிரடி
இதேவேளை, தென்னிலங்கையில் எதிரணி அரசியல்வாதியொருவருக்குச் சொந்தமான சீனித் தொழிற்சாலையொன்றுக்குள் அரச ஆதரளவாளர்கள் அதிரடியாக நுழைந்து முற்றுகை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
சர்ச்சைக்குரிய புதிய மசோதா ஒன்றின்மூலம் அரசாங்கம் அரசுடமையாக்க எண்ணியிருக்கின்ற நிறுவனங்களில் செவனகலையிலுள்ள இந்த சீனித் தொழிற்சாலையும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply