அரசுடனான அமைதி முயற்சி ஆரோக்கியமானதாக இல்லை; லண்டனில் கூட்டமைப்பினர் தெரிவிப்பு
இலங்கையில் அமைதி முயற்சி ஆரோக்கியமான முறையில் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரிட்டனில் தெரிவித்துள்ளது. இந்தக் காரணத்தினாலேயே சர்வதேச சமூகத்துக்கு இது பற்றிய விளக்கத்தை வழங்கவேண்டிய தேவை எழுந்துள்ளதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் அழைப்பை ஏற்று வோஷிங்ரன் சென்ற கூட்டமைப்பின் 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது லண்டனில் தங்கி உள்ளனர். பிரிட்டிஷ் உள்துறைச் செயலர் அலிஸ்ரர் ஜேம்ஸ் ஹென்றி பேர்ட்டுடன் அவர்கள் பேச்சு நடத்தினர். நேற்றுமுன்தினம் நடந்த இந்தச் சந்திப்பில் பிரிட்டிஷ் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உயர்அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் சென்ற குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரும் அடங்கி இருந்தனர். அமெரிக்காவுக்கான தமது பயணத்தைப் பற்றியும் அவர்கள் பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு விளக்கினர்.
அரசுடன் தாம் தற்போது மேற்கொண்டுவரும் அமைதி முயற்சி குறித்து நீண்ட விளக்கமளித்த கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைதி முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பைத் தமிழர் தரப்பு வழங்கி வருகிறது என்றும் கூறினர். ஆனால் “தீர்வு குறித்து தெளிவற்றதும், ஆக்கபூர்வமற்றதுமான நிலைப்பாட்டையே அரசு கொண்டிருப்பதாகக் கருத முடிகிறது” என்றும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
“தமிழர்களின் அரசியல் அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். அவர்களுக்குரிய அதிகாரங்கள் தெளிவாக இருக்கவேண்டும். அரசு இந்த இடத்திற்குச் செல்ல சர்வதேச சமூகம் உரிய அழுத்தத்தை வழங்க வேண்டும். பிரிட்டனின் பங்கும் இதில் இன்றியமையாதது” என்று கூட்டமைப்பினர் கூறியுள்ளனர்.பிரிட்டிஷ் பிரதமர் கெமரூனை சந்திப்பதற்குத் தமிழ்க் கூட்டமைப்பினர் விரும்பியபோதும் அதிக வேலைப்பளு காரணமாக பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கப்படவில்லை என லண்டன் தகவல்கள் தெரிவித்தன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply