இலங்கைக்கு எதிராக செயற்படுவதற்கு TNA யின் பின்னணியில் இந்தியா செயற்படுகிறது : குணதாச அமரசேகர

இந்தியாவின் வாயை மூடுவதற்கு தமிழ் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் துண்டிக்க வேண்டும். இலங்கைக்கு எதிராக இந்தியா மற்றும் சம்பந்தன் குழு உட்பட மேற்குலக நாடுகள் கூட்டு சதியில் ஈடுபட்டுள்ளன என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் குற்றம் சுமத்தியுள்ளது. நாட்டிற்கு எதிராக செயற்படுபவர்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளனர். குறிப்பாகக் கூட்டமைப்பினர் இலங்கைக்கு எதிராக பாரிய துரோகத்தனத்தை செய்துள்ளனர். இவர்களின் அரசியல் அங்கீகாரங்களை பறிக்க வேண்டுமென்றும் அந்த இயக்கம் குறிப்பிட்டுள்ளது.
 
 
இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர கூறுகையில், புலிகளுக்கு பிறகு தமிழ் தேசியக் கூட்டமைப்பே இலங்கைக்கு எதிரான பிரிவினைவாத போராட்டத்தை முன்னெடுக்கின்றது.
 
 சர்வதேசத்துடன் கூட்டணியமைத்துக் கொள்வதற்கும் இலங்கைக்கு எதிராக செயற்படுவதற்கும் கூட்டமைப்பினர் பின்னணியில் இந்தியா செயற்படுகிறது. எனவே, துரோகிகளை இனங்கண்டு விட்டோம். அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளே முக்கியமாகும்.
 
 இந்தியா இரட்டை வேடம் போட்டு இலங்கையுடன் செயற்படுகின்றது. கூட்டமைப்பினர் இந்தியாவுடன் இணைந்து சர்வதேசத்தில் நாட்டிற்கு எதிரான சதிகளை முன்னெடுக்கின்றனர். எனவே எவ்வகையிலும் கூட்டமைப்பினருடனான அரசாங்கத்தின் பேச்சு நாட்டிற்கோ தமிழ் மக்களுக்கோ நன்மை ஏற்படுத்தப் போவதில்லை.மாறாக நாடு பிரிவினைவாதத்தை நோக்கியே பயணிக்கும்.
 
 ஆகவே, அரசாங்கம் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்புரிமைகள் மற்றும் அரசியல் அந்தஸ்துகளை இல்லாதொழித்து நாட்டிற்கு எதிரான சூழ்ச்சிகளுக்காக தண்டனை வழங்க வேண்டும் என குணதாச அமரசேகர கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply