இலங்கையில் ஏழு இரகசிய முகாம்கள் இயங்குவதாக ஐ.நாவில் தெரிவிப்பு
இலங்கை இராணுவம் மற்றும் அரசாங்கத்தின் ஆதரவு, ஆயுத குழுக்களின் கீழ் ஏழு இரகசிய முகாம்கள் இயங்கி வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனிவா அமர்வின்போது சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்திருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, இலங்கை இராணுவமும் அரச ஆதரவு ஆயுதக் குழுக்களும் இந்த இரகசிய முகாம்களை நடத்தியதாகவும் இதில் சில இன்னமும் செயல்படலாம் என்ற சந்தேகத்தையும் சர்வதேச மன்னிப்பு சபை அமைப்பு வெளியிட்டுள்ளது. இது போன்ற இடங்களில் சித்திரவதைகள், சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் போன்றவை நடைபெற்றதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
குறிப்பாக 7 முகாம்களின் முகவரியை சர்வதேச மன்னிப்புச் சபை அறிவித்துள்ளது. வவுனியா பூந்தோட்டம் கல்லூரி, வவுனியாவில் இருக்கும் 211 ஆவது பிரிகேடின் தலைமையகம், வெளிக்குளம் பாடசாலை, புளொட் அமைப்பின் வவுனியா தடுப்பு மையம் மற்றும் தர்மபுரத்துக்கு 14 மைல்கள் தொலைவில் உள்ள ஐந்து கைவிடப்பட்ட வீடுகள் மற்றும் கட்டிடங்களில் முன்னாள் புலிகள் 700 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 80 பேர் புலிகளின் முன்னணித் தலைவர்கள் என்றும் 300 பேர் புலிகளின் ஆதரவாக செயல்பட்ட பொது மக்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை தவிர, முல்லைத்தீவில் இரண்டு இடங்கள் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இலங்கையில் நிலவும் மனித உரிமை மீறல்கள் குறித்து இந்த அமர்வில் விரிவாக ஆராயப்பட்டது. குழுவின் தலைவரான பெலிஸ் கியர் இலங்கையின் மனித உரிமைகள் நிலை குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். மனித உரிமை மீறல்கள் குறித்த சர்வதேச மன்னிப்பு சபை அமைப்பு உள்ளிட்ட அமைப்புக்கள் அளித்த ஆதாரங்கள் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளன.
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டோர் மீது சுயாதீனமாக மருத்துவ பரிசோதனை நடத்தப்படுவதில்லை என்றும் ஐ.நாவின் சித்திரவதைகளுக்கு எதிரான குழுவின் தலைவர் பெலிஸ் கியர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply