ஏழு இரகசிய முகாம்கள் என்று ஒன்றும் இல்லை: சித்தார்த்தன்
ஏழு இரகசிய முகாம்கள் என்று ஒன்றும் இல்லை. முன்பும் இருந்ததும் இல்லை என புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
சித்திரவதைகளுக்கெதிரான ஐ.நா மன்றக்குழுவின் ஜெனீவா அமர்வில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து நேற்று ஆராயப்பட்டபோது, இந்தக்குழுவின் துணைத் தலைவரான பெலிஸ் கியர் இலங்கையில் பாரிய மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக தமக்கு பல புகார்கள் வந்ததாக கூறியதுடன் இலங்கையில் ஏழு இரகசிய முகாம்கள் இருப்பதாகவும் அங்கு முன்னாள் புலி உறுப்பினர்கள் 700பேர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா பூந்தோட்டம் கல்லூரி, வவுனியா 211வது பிரிகேட்டின் தலைமையகம், வெளிக்குளம் பாடசாலை, புளொட் அமைப்பின் வவுனியா தடுப்புமையம், தர்மபுரத்திற்கு பகுதியில் கைவிடப்பட்ட ஐந்து வீடுகள் மற்றும் கட்டிடங்கள், முல்லைத்தீவில் இரு முகாம்கள் என்பன இரகசிய தடுப்பு முகாம்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயத்தில் புளொட் அமைப்பின்மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுப் பற்றி அந்த அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் பி.பி.சியிற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து இங்கு கருத்து தெரிவித்துள்ள அவர், ‘ஏழு இரகசிய முகாம்கள் என்று ஒன்றும் இல்லை. முன்பும் இருந்ததும் இல்லை. அவர்கள் கூறுகின்ற வவுனியா ஹொரவப்பத்தானை வீதியில் இருக்கின்ற எங்கள் அலுவலகம் மக்கள் வந்து எங்களைச் சந்திக்கின்ற ஒரு அலுவலகமாக இருந்திருக்கின்றது. அங்கு நானும் அடிக்கடி சென்று பணிபுரிந்திருக்கின்றேன். நான் இங்கிருந்து செல்லுகின்றபோது அங்குதான் கூடுதலாக நின்று ஆட்களைச் சந்திப்பது வழக்கம்.
யுத்தகாலத்தில் புலிகள் எங்களைத் தாக்கியபோது பாதுகாப்புக்கருதி எங்களுக்கு இராணுவத்துடன் ஒரு உறவு இருந்தது. யுத்தம் முடிந்தபின்பு இடம்பெயர்ந்த மக்கள் இருந்த முகாம்களுக்குள்கூட இராணுவம் எங்களை அனுமதிக்கவில்லை. ஆகவே இப்படியான குற்றச்சாட்டுக்களை முற்றுமுழுதாக நான் நிராகரிக்கிறேன். இதை யாராவது நிரூபிக்க முடியுமென்றால் நாங்கள் அரசியலில் இருந்துகூட ஒதுங்குவதற்குத் தயாராக இருக்கின்றோம்” என்று தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply