பிரச்சினைகள் தீரும் வரை இலங்கைக்கு வரமாட்டேன்! மஹிந்தவின் அழைப்பிற்கு மன்மோகன் பதில்

இலங்கைத் தமிழர்களின் மீள் குடியமர்வு, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் உள்ளிட்ட பிரச்சினைகள் தீரும் வரை இலங்கைக்கு வர மாட்டேன் என இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.நேற்று முன்தினம் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மாலைதீவில் சந்தித்துப் பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்ததாக தமிழகத்தின் தினமலர் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து அவ் இணையத்தளம் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தெற்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான, சார்க் அமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்ள மாலைதீவு சென்ற பிரதமர் மன்மோகன் சிங் நேற்று முன்தினம் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானியை சந்தித்துப் பேசினார். காலை 9.30 மணி யளவில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் போது பல விடயங்கள் குறித்து இருவரும் கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பின் போது, இலங்கைக்கு வருமாறு மஹிந்த ராஜபக்ச, மன்மோகன் சிங்கிற்கு அழைப்பு விடுத்தார்.

அதற்கு அவர், இலங்கைத் தமிழர்கள் மீள் குடியமர்வு விவகாரம், அதிகாரப் பகிர்வு விவகாரத்தில் தீர்வு, தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது போன்ற பிரச்சினைகளில் நல்ல தீர்வு ஏற்படும் வரை இலங்கைக்கு வர இயலாது என உறுதிபடத் தெரிவித்தாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply