2018 காமன்வெல்த் போட்டிகள் இலங்கையில் இல்லை

2018ஆம் ஆண்டில் நடக்கக்கூடிய காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு இலங்கையின் அம்பாந்தோட்டை நகரம் முன்வைத்த கோரிக்கைத் திட்டத்தை முறியடித்து அப்போட்டிகளை நடத்தும் நகரமாக ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரம் தெரிவாகியுள்ளது.கரீபியன் தீவுகளில் ஒன்றாக செயிண்ட் கிட்ஸில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுச் சம்மேளனக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் வடகிழக்கில் உள்ள குவின்ஸ்லாந்து மாகாணத்துடைய தென்கிழக்கு கடலோர நகரம் கோல்ட் கோஸ்ட் ஆகும்.

இலங்கையின் தெற்கிலுள்ள அம்பாந்தோட்டை நகரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சொந்த ஊர் ஆகும்.

கோல்ட் கோஸ்ட் நகரம் 2018 போட்டிகளை நடத்துவதற்கு ஆதரவாக 43 வாக்குகள் பதிவாகின.

இலங்கையின் அம்பாந்தோட்டைக்கு ஆதரவாக 27 ஓட்டுகள் மட்டுமே பதிவாகியிருந்தன.

காமல்வெல்த் போட்டிகளின் 80 ஆண்டு கால சரித்திரத்தில் ஆஸ்திரேலியா இதற்கு முன்னர் நான்கு முறை காமன்வெல்த் போட்டிகளை நடத்தியுள்ளது.

ஆனால் இலங்கை முதல் தடவையாக இந்தப் போட்டிகளை நடத்தக் கோரி அம்பாந்தோட்டை கோரிக்கைத் திட்டத்தை முன்வைத்திருந்தது.

கோல்ட் கோஸ்ட் நகரத்தைப் பொறுத்தவரையில் அங்கு விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு ஏற்கனவே அரங்கங்கள் இருக்கின்றன.

ஆனால் 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் பாதிக்கப்பட்ட இடமான அம்பாந்தோட்டை நகரமோ இந்தப் போட்டிகளை நடத்துவதற்கு தேவையான புதிய அரங்கங்கள், சர்வதேச விமான நிலையம், பிற கட்டமைப்பு வசதிகள் எல்லாவற்றையும் 2016ஆம் ஆண்டுக்குள் தாங்கள் கட்டிவிடுவோம் என தமது கோரிக்கைத் திட்டத்தில் வாக்குறுதியளித்திருந்தது.

2014ஆம் ஆண்டில் நடக்கவிருக்கின்ற அடுத்த காமன்வெல்த் போட்டிகள் பிரிட்டனின் கிளாஸ்கோ நகரில் நடக்கவுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply