ஆணைக்குழுவில் சாட்சியமளித்தவர் சி.ஐ.டி. விசாரணைக்கு அழைப்பு
இலங்கையில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட படிப்பினைகள் றும் நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளித்திருந்த 45 வயதான விதவைப் பெணணான இரத்தினம் பூங்கோதை என்பவர் தற்போது குற்றப் புலனாய்வுத் துறையினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 27 ம் திகதி கல்முனையில் நடைபெற்ற ஆணைக்குழுவின் அமர்வில் 4 பிள்ளைகளின் தாயான இரத்தினம் பூங்கோதை சாட்சியம் அளித்திருந்தார். 2007க்குப் பின்னர் – அதாவது தற்போதை அரசாங்கத்தின் பதவிக் காலத்தின்போது, சட்டவிரோதமான முறையில் தான் கடத்தப்பட்டு ஆயுதக் குழுவொன்றினால் தடுத்து வைக்கப்பட்டதாகவும், அதேபோல பொலிசாரால் அழைத்துச் செல்லப்பட்ட 3 பிள்ளைகளின் தாயான தனது சகோதரியொருவர் காணாமல் போயுள்ளதாகவும் எல்.எல்.ஆர்.சி.யிடம் தெரிவித்திருந்த பூங்கோதை தனக்கு நியாயம் வழங்குமாறு கோரியிருந்தார். இது தொடர்பாக விசாரிப்பதற்காக குற்றப் புலனாய்வுத் துறையினர் தன்னை கொழும்பிலுள்ள விசாரணை மையத்தின் 4ஆம் மாடிக்கு எதிர்வரும் 25ஆம் திகதி வருமாறு கல்முனை பொலிஸ் ஊடாக அழைத்துள்ளதாக இவர் கூறுகிறார்.
தனது பாதுகாப்பு மற்றும் குடும்ப பொருளாதார நிலைமையை சுட்டிக் காட்டி கொழும்பிற்கு செல்ல முடியாத நிலை பற்றி தான் ஆணைக்குழுவிடம் தெரிவித்தபோது, கல்முனையிலேயே இந்த விசாரணைக்கான ஏற்பாடுகளை செய்துதருவதாக ஆணைக்குழு பதிலளித்ததாக அவர் கூறுகிறார். கல்முனையில் இந்த விசாரணை நடைபெறும்போது மனித உரிமை அமைப்பின் பிரதிநிதியொருவர் அல்லது சட்டத்தரணி ஒருவர் முன்னிலையிலேயே இந்த விசாரணை நடைபெற வேண்டும் என தான் விரும்புவதாக அவர் தெரிவிக்கிறார். 2007ஆம் ஆண்டிற்கு முன்னர், முந்தைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலங்களில் தனது இரு சகோதரர்கள் காணாமல் போனதாகவும், ஒரு சகோதரி பாலியல் வன்முறைக்கு இலக்காகி மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தனது கணவன் சுற்றி வளைப்பில் கைதாகி சடலம் கூட கிடைக்கவில்லை என்றும் இவர் தெரிவிக்கிறார்.
ஆனால் 2007 ம் ஆண்டிற்கு பின்னர் தனக்கும் தனது குடும்பத்திற்கும் எதிராக இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவே தான் ஆணைக்குழுவிடம் நியாயம் கோருவதாக அவர் தெரிவிக்கிறார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply