இடைத் தேர்தலில் போட்டி அவுங் சான் சூச்சி முடிவு
மியான்மர் தேசிய ஜனநாயக லீக் கட்சித் தலைவர் அவுங் சான் சூச்சி, இடைத் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ளார். இதன் மூலம் மீண்டும் அவர் ஜனநாயக அரசியலில் அதிகாரபூர்வமாக ஈடுபட முடியும்.மியான்மரில் 1990களில் நடந்த பொதுத் தேர்தலில் சூச்சியின் தேசிய ஜனநாயக லீக் (என்.எல்.டி.,) கட்சி பெரும் வெற்றி பெற்றது. ஆனால் அப்போதைய ராணுவ அரசு, அக்கட்சியினர் பதவியேற்க விடாமல் தடுத்து, ராணுவ ஆட்சியைத் தொடர்ந்தது. சூச்சி வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து ராணுவ ஆட்சி, அனைத்துக் கட்சிகளும் தங்களை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து கொள்ள வற்புறுத்தியது. இதை சூச்சி எதிர்த்தார். மேலும், கடந்தாண்டு நவம்பரில் நடந்த தேர்தலையும் அவரது கட்சி புறக்கணித்தது. அதனால், தேர்தல் ஆணையம் என்.எல்.டி.,யின் அங்கீகாரத்தை ரத்து செய்தது.அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் நெருக்கடியால், கடந்தாண்டு நவம்பர் மாதம் நடந்த பொதுத் தேர்தலுக்குப் பின் சில நாட்களில் சூச்சி விடுவிக்கப்பட்டார். இதனால், மியான்மரில் ஜனநாயக ரீதியிலான அரசியலுக்கு வழி ஏற்படும் என்ற நம்பிக்கை உருவானது.
புதிய அதிபர் தெய்ன் செய்ன், அனைத்துக் கட்சிகளும், 2008ல் ராணுவ ஆட்சி உருவாக்கிய புதிய அரசியல் சாசனத்தை கட்டாயமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கட்டாய சட்டத்தை நீக்கிவிட்டார்.இந்நிலையில், என்.எல்.டி., செய்தித் தொடர்பாளர் நியான் வின் நேற்று அளித்த பேட்டியில்,”என்.எல்.டி., விரைவில் பதிவு செய்து கொள்ளும். வரும் இடைத் தேர்தலில் சூச்சி போட்டியிடுவார்’ எனத் தெரிவித்துள்ளார்.மியான்மர் பார்லிமென்ட்டில், தற்போது 40 இடங்கள் காலியாக உள்ளன. எனினும், எப்போது இடைத் தேர்தல், எந்தத் தொகுதியில் சூச்சி போட்டியிடுவார் என்ற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.இதற்கிடையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் நேற்று அளித்த பேட்டியில்,”மியான்மர் உண்மையில் சில சீர்திருத்தங்களை மேற்கொண்டிருக்கிறது. ஆனால், இன்னும் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் நிறைய உள்ளன’ என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply