இராணுவ வெற்றிக்கு கருணாவின் பிரிவு காரணமல்ல இராணுவத் தளபதி லெப்டினட் ஜென்ரல் சரத் பொன்சேகா கூறியுள்ளார்
இராணுவத்தினர் அண்மையில் பெற்ற வெற்றிக்கு விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா அம்மான் பிரிந்தமையே காரணமென ஒருவர் கூறுவாராயின் அது வெட்கப்பட வேண்டியது என இராணுவத் தளபதி லெப்டினட் ஜென்ரல் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுக்கும், கருணா அம்மானுக்கும் இடையில் அப்பொழுது ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாகவே இருவரும் பிரிந்தார்கள் எனவும், கிழக்கை மீட்கும் பணிகளை இராணுவம் ஆரம்பிக்கும்போது கருணா அம்மான் 200 போராளிகளுடன் மாத்திரமே இருந்ததாகவும் இராணுவத் தளபதி கூறியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
விடுதலைப் புலிகளிடமிருந்து கிழக்கை மீட்பதற்கு சாதாரண மக்கள் இராணுவத்தினரக்கு உதவிசெய்ததாகச் சுட்டிக்காட்டிய இராணுவத் தளபதி, கிழக்கிலுள்ள தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் இராணுவத்தினருக்கு மறைமுகமான உதவிகளைச் செய்துவந்ததால் கிழக்கை மீட்க முன்னரே அப்பகுதி மக்களின் நம்பிக்கையை தாம் வென்றுவிட்டதாகக் கூறினார்.
கிழக்கு மாகாணத்தில் 20 கிலோமீற்றர் தூரத்தை மாத்திரமே இராணுவத்தினர் போராடி மீட்டதாகக் குறிப்பிட்ட இராணுவத் தளபதி, எஞ்சிய 89 கிலோமீற்றர் தூரத்தை இராணுவத்தினர் இலகுவில் மீட்டதாகத் தெரிவித்தார்.
கிளிநொச்சியைக் கைப்பற்ற முன்னர் அது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பகல் கனவு எனக் கூறப்பட்டபோதும், விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்கும் நோக்கில் இராணுவத்தினர் போராடி வருவதாகக் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply