ரஷ்ய பிரதமர் புடினுக்கு கன்பூசியஸ் அமைதி விருது

இந்தாண்டுக்கான சீனாவின் கன்பூசியஸ் அமைதி விருது, ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடினுக்கு வழங்கப்பட இருப்பதாக, விருதுக் குழு அறிவித்துள்ளது. சீனாவில் அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்த மனித உரிமை ஆர்வலர் லியூ ஷியாபோவுக்கு, கடந்தாண்டு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. சீன அரசு அதற்கு கடுமையான கண்டனம் தெரிவித்ததோடு, நோபல் பரிசுக்கு மாற்றாக, “கன்பூசியஸ் அமைதி விருது’ என்ற விருதை உருவாக்கியது.
கடந்தாண்டுக்கான கன்பூசியஸ் அமைதி விருதுக்கு, தைவான் முன்னாள் துணை அதிபர் லியான் சான் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் இந்த அறிவிப்பு, அவருக்குத் தெரிவிக்கப்பட்டதா எனத் தெரியவில்லை. அதனால், விருது வழங்கும் விழாவுக்கு அவர் வரவில்லை. அவருக்குப் பதிலாக, ஒரு சிறுமிக்கு அந்த விருது வழங்கப்பட்டது. சானுக்குப் பதிலாக அந்தச் சிறுமி தேர்ந்தெடுக்கப்பட்டது ஏன், அந்தச் சிறுமி சானுக்கு என்ன உறவு முறை என்பது பற்றி, சீனா விவரங்களை வெளியிடவில்லை.

இந்நிலையில், இந்தாண்டுக்கான கன்பூசியஸ் அமைதி விருது, ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடினுக்கு வழங்கப்படுவதாக, விருதுக் குழு அறிவித்தது. லிபியாவில் ஐ.நா., தீர்மானத்தின்படி, குண்டுவீச்சு நடந்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், இந்த விருது அவருக்கு வழங்கப்பட உள்ளதாக குழு உறுப்பினரும், கவிஞருமான கியாமோ டாமோ தெரிவித்தார். அமைதி விருது பற்றிய அறிவிப்பு புடினுக்கு தெரிவிக்கப்பட்டதா எனத் தெரியவில்லை.

கடந்த செப்டம்பர் மாதம் விருதுக் குழு கலைக்கப்படும் என, சீன பண்பாட்டுத் துறை அறிவித்திருந்தது. ஆனால், புடினுக்கான விருதை அறிவித்த டாமோ, புதிய நிர்வாகக் குழு ஒன்றைத் தான் அமைத்துள்ளதாகவும், விருது வழங்கும் விழா நடக்கும் எனவும் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply