சரத்பொன்சேகாவின் வெள்ளைக் கொடி வழக்கும் தீர்ப்பின் முழு விபரம்
முன்னாள் இராணுவ தளபதியும் கூட்டுப்படைகளின் பிரதானியுமான சரத்பொன்சேகாவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வெள்ளைக்கொடி விவகார வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த மூன்று குற்றச்சாட்டுகளில் ஒரு குற்றச்சாட்டில் அவரை குற்றவாளியாக இனங்கண்ட இரண்டு நீதிபதிகள் அவருக்கு மூன்று வருடங்கள் சிறைத்தண்டனையும் 5000 ரூபா அபாராதமும் விதித்து தீர்ப்பளித்தனர்.
அபாராதமாக விதிக்கப்பட்ட 5000 ரூபா தண்டப்பணத்தை செலுத்துவதற்கு தவறின் சிறை தண்டனை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்கப்படும் என்றும் தீர்ப்பளித்தனர். இந்த நீதிபதிகள் குழுவில் அங்கம் வகித்த மூன்றாவது நீதிபதியான வாராவௌ மூன்று குற்றச்சாட்டுகளிலும் சரத் பொன்சேகா குற்றமற்றவர் என அறிவித்தார். இருந்த போதிலும் இரு நீதிபதிகளின் இணக்கப்பாட்டுடன் தீர்ப்பு வழங்கப்பட்டது.
வெள்ளைக்கொடி விவகார வழக்கின் தீர்ப்பு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அரசியல்வாதிகள், பெருந்திரளான ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கான பொலிஸார் நீதிமன்றுக்கு வெளியே குழுமியிருந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
மன்றுக்குள்ளும் சட்டத்தரணிகள், சட்டக்கல்லூரி மாணவர்கள் , பொன்சேகாவின் மனைவி உள்ளிட்ட உறவினர்கள் பௌத்த தேரர்கள் மற்றும் உள்ர், வெளியூர் ஊடகவியலாளர்கள் பெருந்திரளானோர் நிரம்பி வழிந்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு முழுமையாக நீதிமன்றுக்கு வாசிக்கப்படாமல் நீதிபதிகளின் தீர்ப்பு மட்டுமே மன்றுக்கு அறிவிக்கப்பட்டது.
பிரதிவாதிக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் நீதிபதிகளான தீபாலி விஜயசுந்தர மற்றும் சர்பிக் ரஷீன் ஆகிய இருவரும் பிரதிவாதியான சரத் பொன்சேகாவை முதலாவது குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்கண்டதுடன் இரண்டாவது, மூன்றாவது குற்றச்சாட்டுகளிலிருந்து அவரை விடுதலை செய்தனர்.
மூன்றாவது நீதிபதியான எச்.என்.பி.பி வராவௌ மூன்று குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவரை விடுதலை செய்தார். வெள்ளைக்கொடி விவகார வழக்கின் தீர்ப்பு வழங்குவதற்காக நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் 11.35 மணிக்கு கூடியது. அதன் பின்னர் மூன்று நீதிபதிகளும் சில நிமிடங்கள் கலந்துரையாடிவிட்டு தீர்ப்பை முதலியார் ஊடாக அறிவித்தனர்.
தீர்ப்பு நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர் ஏதாவது கூற விரும்புகின்றீர்களா என மனுத்தரப்பிடம் கேட்கப்பட்டது. இதன்போது எழுந்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் புவனகே அலுவிஹார நீதிமன்றம் பிரதிவாதியை குற்றவாளியாக இனங்கண்டுள்ளமையினால் அவருக்கு ஐந்து வருடங்கள் சிறைத்தண்டனை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். சிறை தண்டனையுடன் 5000 ரூபா அபராதமும் விதிக்கப்படவேண்டும் என்பதுடன் வழக்கிற்கான சம்பவம் தொடர்பிலான காரணங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதனிடையே எழுந்த பிரதிவாதியின் சட்டத்தரணியான நளீன் லது ஹெட்டி பிரதிவாதியான சரத்பொன்சேகா பிரதிவாதியின் கூண்டிலிருந்து நீதிமன்றத்திற்கு தனது கருத்துக்களை முன்வைக்கவிருப்புகின்றார் எனக்கூறியமர்ந்தார். இதனையடுத்து எழுந்த பிரதிவாதி அநீதியான இந்த தீர்ப்பை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்றார்.
பிரதிவாதி தனது கருத்தினை சுமார் 15 நிமிடங்கள் கூறியதை அடுத்து எழுந்த பிரதிவாதியின் சட்டத்தரணி நளீன் லது ஹெட்டி இந்த வழக்கு தொடர்பில் வழங்கப்பட்ட தீர்ப்பில் தண்டனை குறித்து நீதிபதிகள் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன். வழக்கின் பிரதிவாதியான பொன்சேகா தனது வாழ்க்கையில் 40 வருடங்களை நாட்டுக்காக அர்ப்பணித்தவர். என்பது மட்டுமன்றி பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்காக மூன்று தடவைகள் இரத்தம் சிந்தியவர்.
பயங்கரவாதத்திலிருந்து நாட்டிற்கு விடுதலை பெற்றுக்கொடுத்தவர் என்பதுடன் நாட்டில் அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டுள்ளது. அதனை அனுப்பவிப்பதற்கு பிரதிவாதியான சரத்பொன்சேகாவிற்கும் இடமளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து நீதிபதியான வராவௌ பிரதான நீதிபதியிடம் ஏதோ கூறுவதற்கு முயற்சித்தபோதிலும் முதலாவது குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்டமையினால் அவருக்கு 3 வருடங்கள் சிறை தண்டனையும் 5000 ரூபா அபராதமும் விதிப்பதாகவும் அபாராத தொகையை செலுத்துவதற்கு தவறினால் சிறை தண்டனை மேலும் ஆறுமாதங்களுக்கு நீடிக்கப்படும் என்றும் நீதிபதி தீர்ப்பளித்தது.
முன்னாள் இராணுவத்தளபதியும் கூட்டுப்படைகளின் பிரதானியுமான ஜெனரல் சரத்பொன்சேகாவிற்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மூன்று குற்றச்சாட்டுகளை முன்வைத்தே குற்றவியல் தண்டனை கோவைச்சட்டத்தின் கீழ் இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
குற்றச்சாட்டுகள்
மக்களுக்கு குழப்பம் விளைவித்து மக்களை அச்சுறுத்தியமை, இனவாதத்தை தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளும் பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழும், அரசாங்கத்திற்கு எதிராக வார்த்தையளவில் விரோதம் செய்தமை என்ற மூன்றாவது குற்றச்சாட்டு தண்டனை சட்டத்தின் கீழும் தாக்கல் செய்யப்பட்டது.
முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா கூறியதாக சண்டே லீடர் பத்திரிகையில் 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் திகதி வெளியான செதி தொடர்பிலேயே மூன்று குற்றச்சாட்டுகளும் அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டன.
வடக்கில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக்கொடியுடன் சரணடைவதற்கு வருகைதந்த விடுதலைப்புலிகள் அமைப்பைச்சேர்ந்த முக்கியஸ்தர்கள் (Gஒட ஒர்டெரெட் தெம் டொ பெ ஷொட்; சரத் fஒன்செக) பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜயசுந்தர தலைமையிலான எச்.என்.பி.பி வராவௌ, சர்பிக் ரஷீன் ஆகிய நீதிபதிகள் குழு முன்னிலையில் ட்ரயல் அட்-பார் முறையில் 2010 ஆம் ஆண்டு நவம்பர் 28 ஆம் திகதி ஆரம்பமானது. இருத்தரப்பு சாட்சிகள் பிரதிவாதியின் கூற்று மற்றும் இருத்தரப்பு சமர்ப்பணங்கள் அடங்களாக 59 நாட்கள் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணை 2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.
நீதிபதி எச்.என்.பி.பி வராவௌ தனது சேவைக்காலம் நிறைவடைந்து ஓய்வுபெறவிருந்த நிலையில் வெள்ளைக்கொடி விவகார வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் குழுவில் அங்கம் வகித்தமையினால் அவரின் சேவைக்காலம் கடந்த வருடம் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டது. வழக்கினை நெறிப்படுத்திய பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வசந்த நவரத்ன பண்டார இவ்வழக்கிலிருந்து விலகிகொள்ளவே அவருக்கு பதிலாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் புவனகே அலுவிஹார இணைந்துக்கொள்ளப்பட்டார்.
விசாரணை முன்னெடுக்கப்பட்ட வேளையில் முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் நீதிமன்றுக்கு வருகைதந்து வழக்கை அவதானித்ததுடன் வழக்கு விசாரணையை அவதானிப்பதற்காக சர்வதேச பாராளுமன்ற ஒன்றியத்தின் பிரதிநிதியான மார்க் டிய+ரினேல் மன்றுக்கு வருகைதந்திருந்தார்.
வெள்ளைக்கொடி விவகார வழக்கு விசாரணை முன்னெடுக்கப்பட்ட வேளையில் மேற்படி வழக்கின் பிரதிவாதியான சரத்பொன்சேகாவை விசேட வாகனத்தில் விசேட பாதுகாப்புடன் அழைத்துவரவேண்டும், அவரின் சிறைக்கூண்டுக்குள் அருகில் ஏனைய கைதிகளை அனுமதிக்கக்கூடாது. அவரது சிறைக்கூண்டுகுள் குளிரூட்டியை பொருத்தவேண்டும் உள்ளிட்ட உத்தரவுகளையும் நீதிபதிகள் குழு சிறைச்சாலைகள் அதிகாரிகளுக்கு பிறப்பித்தது.
அதுமட்டுமன்றி வெள்ளைக்கொடி விவகார வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் நாட்களில் நீதிமன்றத்தின் பாதுகாப்பை பலப்படுத்துமாறும் நீதிபதிகள் குழு நீதிமன்ற பாதுகாப்புக்கு பொறுப்பான பொலிஸாருக்கு உத்தரவிட்டது.
சாட்சிகளின் விபரம்
வழக்கில் மனுதாரர் தரப்பில் சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பெற்றிகா ஜான்ஸ், 58 ஆவது படையணியின் கட்டளையிடும் அதிகாரியாக பணியாற்றிய மேஜர் ஜெரனல் சவேந்திர சில்வா,ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை தூதுவராலயத்தின் வதிவிட பிரதிநிதியான சேனுக்க செனவிரத்ன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம சார்பில் பிரதிநிதி, சிரச மற்றும் தெரண தொலைக்காட்சிகளின் பிரதேச ஊடகவியலாளர்கள் இருவர், செய்திவாசிப்பாளர்கள் மற்றும் செய்தியாசிரியர்களும் சாட்சியமளித்தனர்.
பிரதிவாதியான சரத்பொன்சேகா குற்றவியல் தண்டனை கோவைச்சட்டத்தின் 200 ஆவது சரத்தின் பிரகாரம் தனது நிலைப்பாட்டை பிரதிவாதிகூண்டிலிருந்து தெரிவித்துடன் பிரதிவாதி தரப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான கரு ஜயசூரிய, அனுரகுமார திஸாநாயக்க, ரஜீவ் விஜயசிங்க உயர்நீதிமன்ற,மேல் நீதிமன்ற மற்றும் சுவடிகள் திணைக்க பதிவாளர்கள், இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் பிரதிநிதி சுகுமா ரொக்வ+டர் ஆகியோர் சாட்சிமளித்தனர். அவர்களுக்கு அப்பால் பேராசிரியர் ஏஷ்லி அல்பே ஆங்கில மொழிப்பயன்பாடு மற்றும் இலக்கணம் தொடர்பில் தெளிவுப்படுத்தினர்.
வழக்கின் பிரதான சாட்சியான பெற்றிக்கா ஜான்ஸ் 2010 ஒக்டோபர் 04 ஆம் திகதி முதல் 12 நாட்களுக்கு சாட்சியமளித்தார். பெற்றிக்கா ஜான்ஸ் வழக்காடலின் பிரதியை பெற்றமை நீதிமன்றத்தை அவமதிக்கும் குற்றம் என்றும் நீதிமன்றுக்கு பொருத்தமான ஆடைகளை அணிந்துவருமாறும்,முன்னெடுக்கப்படும் வழக்கு தொடர்பில் சாட்சியினால் பத்திரிகையில் எழுத்த கூடாது என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.
பெற்றிகா ஜான்ஸின் குறிப்பேட்டு புத்தக தாள்களின் தன்மை குறித்து நீதிபதிகள் பரிசீலனை செய்ததுடன் வழக்கு விசாரணை முன்னெடுக்கப்பட்ட வேளையில் நீதிமன்ற வளாகத்தில் அடிக்கொரு தடவை மின்சாரம் தடைப்பட்டமை தொடர்பிலும் நீதிபதிகள் எச்சரித்தனர். அத்துடன் சிரச, தெரண தொலைக்காட்சிகளில் ஒலி,ஒளிப்பரப்பான செய்திகள் அடங்கிய ஒளிநாடாக்களை நீதிமன்றத்தில் வைத்து பார்வையிட்டனர்.
2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி தனது கருத்தினை தெரிவிப்பதற்கு தயாராக விருந்த போதிலும் வடக்கில் இடம்பெற்ற இறுதி யுத்தம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை செயலாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் பதற்றமான நிலைமையொன்று தோற்றியுள்ளது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் பிரதிவாதியின் கூற்று குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்பதனால் அதற்கான சந்தர்ப்பத்தை பிரதிதொரு தினத்திற்கு தருமாறு பிரதிவாதியின் சட்டத்தரணி கேட்டுக்கொண்டார்.
தொண்டை கரகரப்பிற்கு மத்தியில் பிரதிவாதியான பொன்சேகா 140 பக்கங்கள் அடங்கிய கூற்றை 6 நாட்களுக்கு வாசித்தார். அதற்கு பின்னர் பிரதிவாதி தரப்பு சாட்சிகள் சாட்சியமளித்ததுடன் இருத்தரப்பினரின் வாய்மூல சமர்ப்பணங்களும் சமர்ப்பிக்கப்பட்டன. இதனையடுத்தே மேற்படி வழக்கின் தீர்ப்பு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நேற்று வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
இதேவேளை முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகாவை குற்றவாளியாக இனங்கண்ட முதலாவது இராணுவ நீதிமன்றம் அவருக்கு 30 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
அநீதியான தீர்ப்பை நான் நிராகரிக்கின்றேன்: பொன்சேகா
இந்த தீர்ப்பு நீதிமன்ற வரலாற்றையே கேள்விக்குட்படுத்தும் அவ்வாறு இடம்பெறக்கூடாது என்று எண்ணுகின்றேன் என்பதுடன் அநீதியான இந்த தீர்ப்பை நிராகரிக்கின்றேன். இது மக்களிடமிருந்து என்னை தொடர்ந்து விலக்கியே வைப்பதற்கான நடவடிக்கையாகும் என்று முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா தெரிவித்தார்.
வெள்ளைக்கொடி விவகார வழக்கின் தீர்ப்பு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை வாசிக்கப்பட்டதன் பின்னர் நீதிமன்றத்தின் அனுமதியுடன் பிரதிவாதியின் கூண்டிலிருந்து தனது கருத்தை தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சுமார் 15 நிமிடங்கள் தன்னுடைய கருத்தை தெரிவித்த சரத்பொன்சேகா, இந்த வழக்கின் தீர்ப்பு சாதாரணமானது என்று இந்தநாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பெற்றிக்கா ஜான்ஸ் இந்த செய்தியை பத்திரிகையில் பிரசுரிப்பதற்கு முன்னர் மக்கள் அறிந்திருந்தனர் நாடும் இந்த செய்தியை அறிந்திருந்தது.
பெற்றிக்கா ஜான்ஸ் இந்த செய்தியை எழுதுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் டெய்லி மிரர் பத்திரிகையில் இதே செய்தி பிரசுரமானது. அந்த செய்தியை நான் வழங்கவில்லை. சண்டேலீடர் பத்திரிகையில் கடந்த வாரம் இதேமாதிரியாக எழுதப்பட்டுள்ளது அதுதொடர்பில் வழக்கு தாக்கல் செய்வார்களா?
ஜனாதிபதி தேர்தலில் பிரதான எதிரணி வேட்பாளராக போட்டியிட்ட எனக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படுவது ஜனநாயக நாடொன்றில் அனுமதிக்கமுடியாது. அது சர்வாதிகார நாட்டிலேயே செய்யப்படும்.
எனது கட்டளையின் கீழ் செயற்பட்ட இராணுவத்தினர் சர்வதேச சட்டத்திட்டத்தின் கீழும் மனித ஒழுக்கத்திற்கும் அமைவாகவும் செயற்பட்டனர். யுத்தத்திற்கு பின்னர் 12 ஆயிரம் புலிகள் சரணடைந்தவர் அவர்கள் பாதுகாக்குமாறு எந்த அதிகாரியும் பணிக்கவில்லை. எனினும் படையினர் அதை செய்தனர் அதற்காக இராணுவத்தளபதி என்றவகையில் நான் அவர்களுக்கு கௌரவமளிக்கின்றேன்.
ஊடகவியலாளரிடமிருந்து அறிந்துகொண்டதாக நான் பெற்றிக்கா ஜான்ஸிடம் தெரிவித்திருந்தேன் இது தண்டனைக்குரிய குற்றமாகுமா? தீர்ப்பு வழங்கப்பட்டதன் மூலமாக நீதிமன்றத்தின் சுயாதீனம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அநீதியான தீர்ப்பின் மூலம் எனது மனைவியையும் மகள்மார் இருவரையும் தூர விலக்கியே வைப்பது பாவமாகும்.
முகத்துக்கு முகம் அரசியல் செய்வதற்கு அஞ்சுகின்றவர்களே என்னை சிறைப்படுத்தி மக்களிடமிருந்து விலக்கியே வைக்கின்றனர். எதிர்காலங்களில் என்னால் முன்னெடுக்கவிருக்கின்ற நடவடிக்கைகளுக்கு இந்த தீர்ப்பின் மூலம் ஆசீர்வாதம் கிடைத்துள்ளது.
அநீதியான இந்த தீர்ப்பை நான் நிராகரிக்கின்றேன். நாட்டுமக்களும் இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். நான் சிறைக்கு செல்லவேண்டும் என்ற நோக்கத்தில் செயற்பட்ட அரசியல்வாதியின் செயற்பாடு காரணமாகவே இவ்வாறானதொரு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு நீதிமன்ற வரலாற்றில் கரும்புள்ளியாகும். தீர்ப்பை வரலாற்று கேள்விக்குட்படுத்தும் என்று எண்ணுவதுடன் சகல குற்றச்சாட்டுகளிலும் இருந்து விடுதலை செய்த நீதிபதி நீதிமன்றத்தின் வழிக்காட்டி என்று நான் நம்புகின்றேன். அவர் நீதிமன்றத்தை அகௌவப்படுத்தவில்லை.
நீதிமன்ற தீர்ப்பை நான் நிராகரிக்கின்றேன் அதேபோல இந்த அநீதியான செயற்பாடு என மக்கள் நினைத்தால் என்னுடன் கைகோர்க்கவும் என்றும் கோரி நின்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply