கே. ஏ. சுப்பிரமணியம் – நவம் நினைவுக் கூட்டத்தில் ராணுவம் குறுக்கீடு

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் ஆரம்பகால (1978-1989) பொதுச் செயலாளராகச் செயல்பட்டு மறைந்த தோழர் கே.ஏ. சுப்பிரமணியத்தின் 22வது ஆண்டு நினைவாகவும் தோழர் சி.நவரத்தினத்தின் 7வது ஆண்டு நினைவாகவும் நினைவுதினக் கூட்டம் யாழ்ப்பணத்தில் 19/11/2011 அன்று நடைபெற்றது.

பொது மண்டபங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள் எதையும் அரசியல் கூட்டங்களுக்குக் கொடுக்கக் கூடாது என்ற ராணுவ மிரட்டல் காரணமாக பொது மண்டபங்கள் பெற முடியாத சூழலிலேயே மேற்படி நினைவுக் கூட்டம் பு.ஜ.மா.லெ.கட்சியின் வடபிராந்தியப் பணிமனையின் மண்டபத்தில் இடம்பெற்றது.

தோழர் கே. ஏ. சுப்பிரமணியம் நினைவுக் குழு ஏற்பாடு செய்த இக்கூட்டத்திற்கு தோழர் அ. சீவரட்னம் தலைமை தாங்கினார். தோழர்கள் க.தணிகாசலம்இ கா. செல்வம் கதிர்காமநாதன், எஸ்.தவராஜா கா. பஞ்சலிங்கம் ஆகியோர் உரையாற்றினர்.

காலை 11 மணிக்கு கொட்டிய பெருமழைக்கு மத்தியிலும் கூட்டம் ஆரம்பமாகி நடந்துக் கொண்டிருந்த வேளை அங்கு ராணுவத்தினர் வந்து இறங்கி என்ன கூட்டம் ஏது விடயம் என விசாரிக்கத் தொடங்கினார். ஆனால் கூட்டம் நிறுத்தப்படாது தொடர்ந்த அதேவேளை பொறுப்பான தோழர்கள் வெளியில் வந்து ராணுவ அதிகாரிகளுடன் கூட்டவிடயம் பற்றி எடுத்துக் கூறினர்.

இப்போது அவசர காலச் சட்டமும் இல்லாத சூழலில் ஏன் கூட்டம் வைப்பதில் குறுக்கீடு செய்கிறீர்கள் எனத் தோழர்கள் வாதாடினர். தங்களுக்கு மேலிடத்திலிருந்து உத்தரவு வந்திருப்பதாகக் கூறி என்ன கூட்டம் என தகவல் பெறவே வந்ததாகக் கூறியதுடன் கட்சியின் பொதுச் செயலாளர், அமைப்பாளர் மற்றும் தலைமைத் தோழர்கள் பற்றி விசாரித்து தகவல் எடுத்துக் கொண்டனர்.

கூட்டம் தொடர்ந்து நடந்த இரண்டு மணிநேரம் வரை வெளியே நின்று அவதானித்தும் பேச்சுக்களை பதிவு செய்தும் கொண்ட இரானுவத்தினர் கூட்டம் முடிவடைந்தப்பின்னரே அவ்விடத்தைவிட்டகன்றனர்.

இன்றைய யாழ்ப்பாணத்தில் இவ்வாறுதான் இராணுவ நிர்வாகத்தின் கீழான கண்காணிப்பு தலையீடு குறுக்கீடு மிரட்டல் எனத் தொடர்கின்றன. அரசியல் கலந்துரையாடல்களுக்கு ஏற்கனவே தமது தனியார் கல்வி நிறுவனங்களைக் கொடுத்தவர்களே நிகழ்ச்சி நாளில் அவற்றை பூட்டிவிட்டு சென்ற இரண்டு சம்பவங்கள் யாழ் நகரில் அண்மையில் இடம்பெற்றுள்ளன. இவை மறைமுக ராணுவ மிரட்டல் காரணமாகவே இடம் பெற்றன. வடக்கு கிழக்கை ராணுவ ஒடுக்கு முறையின் கீழ் வைத்திருப்பதன் அடிப்படையின் வெளிப்பாடே மேற் கூறப்பட்டவையாகும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply