இலங்கை வரவு செலவுத்திட்டம்

இலங்கையில், எதிர்வரும் நிதியாண்டுக்கான, வரவுசெலவுத் திட்டம் இன்று இலங்கை நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் சமர்ப்பிக்கப்பட்டது. அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட பல சலுகைகளைத் தாங்கிவரும் இந்த வரவு செலவுத்திட்டத்தில், 490 மில்லியன் ரூபாய்கள் என்ற அளவில் நிதிப் பற்றாக்குறை இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
இந்த அளவில் நிதிப்பற்றாக்குறையை இலக்காக வைப்பது ஆரோக்கியமானதுதான், ஆனால் எளிதாக எட்டக்கூடியதா என்பது தெரியவில்லை என்று , கொழும்புப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் மூத்த விரிவுரையாளர் கலாநிதி கணேசமூர்த்தி தெரிவித்தார்.

கணேசமூர்த்தி, கடந்த ஆண்டு நிதிப்பற்றாக்குறை இலக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீதம் என்ற அளவில் இருந்த நிலையில், இந்த ஆண்டு 6.2 சதவீதம் என்று குறைக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டினார்.

அரசின் வருவாய் மற்றும் செலவின இலக்குகள் ஆகிய இரண்டுமே, மாற்றங்களுக்குட்படக்கூடியவை. இலங்கை போன்ற நாடுகளில் வருவாய் எதிர்பார்த்த அளவுக்கு வளருவதில்லை அது போல செலவினங்கள், பணவீக்கம் மற்றும் அந்நிய செலாவணி மதிப்பு உயர்வு போன்றவைகள் காரணமாக அது அதிகரிக்கக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

போலிசாருக்கு மூன்றாவது குழந்தை பிறந்தால் அதற்கு ஒரு லட்ச ரூபாய் தரப்படும் என்ற அறிவிப்பு பற்றி குறிப்பிட்ட கணேசமூர்த்தி, ”மக்கள் தொகைக் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், இந்த கட்டுப்படுத்தப்பட்ட நிலையைப் பேணவேண்டும், இது போன்ற அறிவிப்புகளுக்கு பொருளாதார ரீதியான நியாயம் இல்லை” என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply