தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுவதுபோல இந்நாட்டில் இராணுவ ஆட்சி கிடையாது : முரளிதரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுவதுபோல் இந்நாட்டில் இராணுவ ஆட்சி என்று ஒன்று இடம்பெறவில்லை என்று தெரிவித்த பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஜனாதிபதிக்கு யாவரும் ஆலோசனைக் கூற வேண்டிய தேவை இல்லை என்றும் கூறினார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

நாட்டின் இறைமை மற்றும் மக்களின் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே வரவு செலவுத் திட்டம் அமைய வேண்டும். மாறாக அது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளின் வரவு செலவுத் திட்டத்தைப் போன்று இருக்க வேண்டும் என்று கூறுவது தவறாகும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைப் பொறுத்தவரையில் அவர் இந்தச் சபையில் பல வரவு செலவுத் திட்டங்களை சமர்ப்பித்திருக்கின்றார். எனவே, வரவு செலவுத் திட்டம் தொடர்பில் அவருக்கு யாரும் ஆலோசனை கூறத் தேவையில்லை.

பங்குச் சந்தையை மட்டும் அடிப்படையாக வைத்து ஒரு நாட்டின் பொருளாதாரத்தை மதிப்பிட முடியாது. எதிர்காலத்தில் சகலதும் முன்னேற்றகரமாகவே நடக்கவிருக்கின்றது.

ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்றுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கூறுகின்றது.

அவ்வாறான நிலையில் எதற்காக இங்கு துவேசம் பேச வேண்டும்.

கொக்கச்சான் பகுதியில் சிங்களக் குடியேற்றம் மேற்கொள்ளப்பட் டிருப்பதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. கூறினார்.

எனினும், ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தில்தான் அந்த சிங்களக் குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டது.

சிறுபான்மை மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுக்கு என்று ஒரு பொறுப்பு இருக்கின்றது. குறித்த கட்சிகள் தமது மக்களுக்கு ஏதாவது நன்மைகளை செய்தாக வேண்டும்.

ஆறுமுகன் தொண்டமான், ரவூப் ஹக்கீம், அதாவுல்லா மற்றும் ரிசாட் பதியுதீன் போன்றவர்கள் இன்று அரசாங்கத்துடன் இருக்கின்றனர். தமது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக அவர்கள் அரசுடன் இணைந்து கொண்டிருக்கின்றனர். இது குறித்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சிந்திக்க வேண்டும்.

வடக்கு கிழக்கில் இராணுவ ஆட்சி இடம்பெறுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூறி வருகின்றனர்.

ஆனால் ஜனாதிபதித் தேர்தலின்போது இராணுவத் தளபதிக்கு ஆதரவளித்தனர். அந்த ஆதரவு இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. கூட்டமைப்பு கூறுவதுபோல எந்தவொரு இராணுவ ஆட்சியும் இங்கு இல்லை. அவ்வாறு இராணுவம் இடம்பெறுமானால் வடக்கில் சுதந்திரமான தேர்தல்கள் இடம்பெற்றிருக்கமாட்டாது என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply