முள்ளிவாய்க்கால் கிழக்கு மக்கள் கோம்பாவிலில் மீள்குடியேற்றம்

வவுனியா மெனிக்பாம் நலன்புரி நிலையத்தில் வலயம் – 0, வலயம் – 2 ஆகியவற்றில் தங்கியுள்ள இடம்பெயர்ந்த மக்களில் தெரிவுசெய்யப்பட்ட 72 குடும்பங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் கோம்பாவில் பகுதியில் முதற்கட்டமாக வெள்ளிக்கிழமை குடியேற்றப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம அலுவலகர் பிரிவைச் சேர்ந்த மக்களே  கோம்பாவில் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட இடைத்தங்கல் நலன்புரி நிலையத்தில் குடியேற்றட்டுள்ளதாக அந்த மாவட்டத்தின் அரசாங்க அதிபர் என். வேதநாயகம் தெரிவித்தார்.

5 பஸ்களில்; நேற்று வியாழக்கிழமை அழைத்துவரப்பட்ட 72 குடும்பங்களைச் சேர்ந்த 229 உறுப்பினர்கள், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கைவேலி கணேசா வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கான பதிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.

கோம்பாவில் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட இடைத்தங்கல் நலன்புரி நிலையத்தில் இவர்களுக்கான தங்குமிட வசதிகள்,  மலசலகூட வசதிகள் உள்ளிட்ட வசதிகள்  ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு 3 நாட்களுக்கு சமைத்த உணவு வழங்கப்படுவதுடன்,  உணவுப்பொதிகளும் வழங்கப்படுமெனவும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம அலுவலகர் பிரிவு உள்ளிட்ட சில பகுதிகளில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகள் அகற்றும் நடவடிக்கைகளில்  தாமதம் ஏற்பட்டுள்ளன. இந்த  நிலையிலேயே அப்பகுதிகளைச் சேர்ந்த மக்களை கோம்பாவில் இடைத்தங்கல் முகாமில் தங்கவைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, மெனிக்பாம் நலன்புரி நிலையத்தில் இடம்பெயர்ந்த நிலையில் தங்கியுள்ள  புதுக்குடியிருப்பு மேற்கிலுள்ள முக்கோணப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் எதிர்வரும் 27ஆம் திகதி மீள்குடியேற்றப்படவுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply