பேச்சுக்களின் மூலம் சர்வதேசத்தை அரசு ஏமாற்ற முனைகின்றது: சுரேஷ்
சர்வதேச சமூகம் எப்பொழுதும் பார்த்துக் கொண்டேயிருக்கும் என நினைப்பது புத்திசாலித்தனமான விடயமல்ல. சீனா, ரஷ்யா போன்ற நாடுகளில் ஆதரவும் அனுசரணையும் இலங்கை அரசாங்கத்துக்கு எவ்வளவு காலத்திற்குதான் சாத்தியமாகும் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சுவார்த்தைக் குழுவின் உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரச தரப்பினருடன் நடாத்திய பேச்சுவார்த்தை கடந்த (டிசம்பர்) 03 ஆம் திகதி முறிவடைந்து விட்டது அல்லது விரிசல் ஏற்பட்டு விட்டது என்றே கூறப்படுகின்றது. இந்நிலையில் இரு தரப்பு பேச்சுவார்த்தை முறிவடைந்ததற்கான காரணங்களின் அடிப்படைத் தன்மையென்ன என அவரிடம் வினவிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“இந்தியா, அமெரிக்கா, சர்வதேச சமூகம் போன்றவற்றின் அழுத்தம் காரணமாகவே இலங்கை அரசாங்கம் எங்களுடன் பேச வேண்டுமென்ற நிலைப்பாட்டுக்கு வந்தது. நாங்களும் சர்வதேசத்தின் கோரிக்கைக்கு மதிப்பளித்தே பேச்சுவார்த்தைக்கு சென்றோம்.
கடந்த டிசம்பர் 01ஆம், 03ஆம் திகதிகளில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அரச தரப்பில் பங்கு கொண்ட வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நாடாளுமன்ற தெரிவுக் குழுவுக்கு கூட்டமைப்பு தமது பிரதி நிதிகளை நியமிக்காத பட்சத்தில் பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்வது சாத்தியமாக இருக்காது எனத் தெரிவித்ததன் பேரில் உடன்படிக்கையின் முழு விடயங்களையும் நாங்கள் அவருக்கு தெளிவுபடுத்திக் கூறினோம்.
இப் பேச்சுவார்த்தைகளைக் காரணங்காட்டி இலங்கை அரசாங்கமானது சர்வதேச சமூகத்தை ஏமாற்ற நினைக்கிறது. இன்றைய நிலையில் இலங்கையில் இனப் பிரச்சினையென ஒன்றுமில்லை என எடுத்துக் காட்டுவதற்கும் பொருளாதார அபிவிருத்தியை கொண்டு வந்து விட்டால் பிரச்சினைகள் தீர்ந்து விடும் என்று வெளியுலகுக்கு காட்டுவதற்காகவுமே அரசு எவ்வித தீர்வையும் முன் வைக்காமல் பேச்சுவார்த்தைகளை தமக்குச் சாதகமாக்கப் பார்க்கிறது. அதில் எங்களைப் பலிக்கடாவாக்கவும் முனைகிறது. இதை நாம் சர்வதேச சமூகத்துக்குத் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளோம். இவர்களது கபட நாடகத்தை ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா, இந்தியா உட்பட சகல தரப்பினரும் நன்றாக உணர்ந்துள்ளனர்” என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply