நூற்றுக்கு மேற்பட்ட பாடசாலைகள் வடக்கில் படையினர் வசம்: ஆனந்தன்
அதிஉயர் பாதுகாப்பு வலயம் மற்றும் படையினரின் பாதுகாப்பு என்பவற்றைக் காரணங்காட்டி வடக்கில் 111 பாடசாலைகளை படையினர் தம் வசப்படுத்தியுள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நேற்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
வரவுசெலவுத்திட்டத்தில் கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வடக்கில் ஆங்கில ஆசிரியர்கள் 600 பேரும், கணித மற்றும் விஞ்ஞான பாட ஆசிரியர்கள் 200 பேரும் தேவைப்படுகின்றனர். 420 பாடசாலைகளுக்கு நிரந்தரமான அதிபர்கள் இல்லை. இங்கு பதில் அதிபர்களாகக் கடமையாற்றும் அதிபர்களை நிரந்தரமாக நியமிப்பதன் மூலம் இக்குறைபாட்டை நிவர்த்தி செய்யலாம்.
யுத்தம் முடிவடைந்து இரண்டரை வருடங்கள் கடந்துள்ள போதும், அதிஉயர் பாதுகாப்பு வலயம் மற்றும் தங்களது பாதுகாப்பு என்பனவற்றைக் காரணங்காட்டி படையினர் வடக்கில் 111 பாடசாலைகளைத் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
அவற்றில் பல பாடசாலைகள் அபிவிருத்தி செய்வதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் கூட அவற்றை அபிவிருத்தி செய்ய முடியாதுள்ளது.
யுத்தம் காரணமாகப் பெற்றோர்களை இழந்த 5,000 மாணவர்கள் வடக்கில் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து கல்விச் செயற்பாட்டை தொடர்வதோடு , அவர்கள் இன்னொருவர் மீது தங்கியும் வாழ்கின்றனர்.
இம் மாணவர்களுக்கு விசேட நிதி ஒதுக்கப்படவேண்டும் என கடந்த வருட வரவுசெலவுத்திட்ட உரையில் கோரியிருந்தேன். இப்போதும் கோருகிறேன்.
இதேபோல பெற்றோரில் ஒருவரை அதாவது, தாய் அல்லது தந்தையை இழந்த மாணவர்கள் வடக்கில் 12 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்கள் மீதும் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும். ஆகவே, நாட்டின் ஏனைய மாவட்டங்களை விட அரசு வன்னி மாவட்டத்தின் கல்வி வளர்ச்சி தொடர்பாக விசேட கவனம் செலுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply