கூட்டமைப்பு முன்வைத்த மூன்று முக்கிய விடயங்களை ஏற்க அரசு மறுப்பு
அதிகாரப் பரவலாக்கல் தொடர்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளில் மூன்று முக்கிய விடயங்களை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதிருப்பதாக அசர தரப்பினர் இன்றைய பேச்சுவார்த்தையின் போது தெரிவித்துள்ளனர்.
அரசாங்கத்துக்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்குமிடையில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற 15 ஆவது பேச்சுவார்த்தையின் போது பாராளுமன்ற தெரிவுக்குழு விவகாரம் தொடர்பில் அரச தரப்பில் அழுத்தம் கொடுத்ததையடுத்து அன்று இரு தரப்புக்கிடையிலான பேச்சுவார்த்தை முறிவடைந்தது.
இந்நிலையில், மீண்டும் இந்தப் பேச்சுவார்த்தை இன்று இடம்பெற்றது. பாராளுமன்றக் கட்டிடத்தொகுதியில் மாலை சுமார் 3 மணிமுதல் 5 மணிவரை இடம்பெற்ற இந்தப் பேச்சு வார்த்தையில் கடந்த வாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய தெரிவுக் குழுதொடர்பில் எந்தவொரு விடயத்தையும் அரச தரப்பு முன்வைக்கவில்லை எனத் தெரிய வருகின்றது.
இன்றைய பேச்சுவார்த்தையின் போது அதிகாரப் பரவலாக்கல் தொடர்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளில் மூன்று முக்கிய விடயங்களான,
1. வடக்கு – கிழக்கு இணைப்பு
2. சட்டம் – ஒழுங்கு விவகாரம்
3. அரச நிலங்களை மாகாண சபைகளுக்கு உரித்தாக்குதல்
ஆகிய விடயங்களை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என அரச தரப்பு அறிவித்துள்ளதாக தெரிய வருகிறது.
இந்தநிலையில் மேற்படி விடயங்கள் இனப்பிரச்சினை தொடர்பிலான அரசாங்கத்தின் தீர்வு விடயத்தில் மிகவும் முக்கியமான அம்சமாகும் என கூட்டமைப்பு சார்பில் எடுத்து கூறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தையின் போது, அரச தரப்பில் அமைச்சர்களான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், நிமால் சிறி பாலடி சில்வா ஆகியோரும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு சார்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், எம்.சுமந்திரன், கனக ஈஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர். __
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply