விவசாயத்தில் மிளிர்ந்த வன்னி மக்களுக்கு இன்று மண்வெட்டி இல்லை!
விவசாயத்தில் செல்வச்செழிப்புடன் திகழ்ந்த வன்னி மக்கள் இப்போது அனைத்தையும் இழந்து மண்வெட்டிகூட இல்லா மல் வாழ்கின்றனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.
வரவுசெலவுத்திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இதுதொடர்பாக மேலும் கூறியவை வருமாறு:
வன்னி மாவட்டம் விவசாயம் மற்றும் கால்நடை உற்பத்தியில் நல்ல நிலையிலிருந்து யுத் தத்தால் அது வீழ்ச்சியடைந்தது. வன்னி மக்கள் கடும் உழைப்பாளிகளாக இருந்து சொத்துகளுடன் வாழ்ந்தவர்கள். யுத்தத்தால் அவர்கள் அனைத்தையும் இழந்து இப்போது வெறுங்கையுடன் உள்ளனர்.
நெல் உற்பத்தியில் அவர்கள் பாரிய பங்களிப்புச் செய்தனர். ஆயிரக்கணக்கான உழவு மற்றும் நீர் இறைக்கும் இயந்திரங்கள் அனைத்தையும் முள்ளிவாய்க்காலில் விட்டுச்சென்றனர். இப்போது அவர்கள் மண்வெட்டிகூட இல்லாமல் இருக்கின்றனர்.அந்த இயந்திரங்களை அவர்களிடம் மீண்டும் கையளிக்க முல்லைத்தீவு அரச பணிமனையின் ஊடாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் அவை தோல்வியில் முடிந்தன. இறுதியில் அந்த இயந்திரத்தின் உதிரிப்பாகங்கள் தெற்கிற்கும் கொண்டுவரப்பட்டதுதான் மிச்சம்.
வன்னியில் உள்ள அதிக போதனாசிரியர் அலுவலகங்கள் இப்போது படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளன. அவை மீள ஒப்படைக்கப்படவேண்டும். போதனாசிரியர்களின் தட்டுப்பாடு நிவர்த்திசெய்யப்படவேண்டும்.
மன்னாரில் 25,000 ஏக்கர் நிலத்தில் நெல் உற்பத்திசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. ஆனால், நெற்களஞ்சியங்கள் யுத்தத்தால் அழிக்கப்பட்ட நிலையில் உள்ளன. அவை புனரமைக்கப்படவேண்டும். மன்னார் கட்டுக்கரை குளத்துநீரைப் பயன்படுத்தி அங்கு நெல் உற்பத்தியை 37 ஆயிரம் ஏக்கர் நிலத்திலிருந்து 45 ஆயிரம் ஏக்கர் நிலத்திற்கு விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ஆனால், இந்த கட்டுக்கரை குளத்திற்கு மல்வத்து ஓயாவில் இருந்தே நீர் கொண்டுவரப்படுகின்றது. அதில் 10 சதவீதமான நீரே கட்டுக்கரை குளத்திற்கு வருகிறது. மீதி 90 சதவீதமான நீர் கடலில் கலக்கின்றது.
100 சதவீத நீரையும கட்டுக்கரை குளத்திற்கே கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு கோரி மன்னாரைச் சேர்ந்த விவசாயிகள் 5 ஆயிரம் பேர் கையெழுத்திட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் மகஜர் ஒன்றைக் கையளித்துள்ளனர்.இந்த மகஜருக்கு ஏற்ப மல்வத்து ஓயா நீரை முழுமையாகக் கட்டுக்கரை குளத்திற்குத் திருப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply