யுத்தத்தின் பின்னான இன நல்லுறவு என்பது ஒரு வழிப்பாதை அல்ல: சிறிரெலோ தலைவர் ப. உதயராசா
பெரும்பான்மை மக்களின் பொறுமையை அவர்களின் கோழைத்தனமாக கருதிவிடக் கூடாது என்பதுபோல ஆளும் அரச தரப்பு முக்கிய அமைச்சர் பேசுவதும் பத்திரிகைகளுக்கு கருத்து தெரிவிப்பதும் இலங்கையில் இன மீளிணக்கம் மீண்டும் வர வழி செய்யமாட்டாது. மாறாக சிறுபான்மை இனங்களை இன்னும் பீதிகொள்ளச் செய்யவே வழி வகுக்கும். யுத்தத்தின் பின்னான இன நல்லுறவு என்பது ஒரு வழி பாதை அல்லவென சிறிரெலோ தலைவர் ப. உதயராசா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இனவாதத்தைத் தூண்டும் அரசியல் தலைவர்களின் பேச்சுக்களினால் 1956, 1958, 1977,1981, 1983 என தொடராக தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் இலங்கைத்தீவு தழுவி கால்நூற்றாண்டுகளாக விட்டுவிட்டுத் தொடர்ந்து தீச்சுவாலைபோல் எரிந்தது. அந்த இனவாத அரசியலின் அக்கினியில் பிறந்ததுதான் கடந்த கால்நூற்றாண்டு நீண்ட கொடிய போர். எத்தனை ஆயிரம் ஆயிரம் சிங்கள, தமிழ் இளைஞர்களை காவு கேட்ட அந்தப் போர் உண்மையில் இனவாத அரசியலின் ஒரு பக்க விளைவு.
1981ல் யாழ்ப்பாணத்தில் 21,000 சிங்களவர்கள் வாழ்ந்தார்கள் என்பதை எவரும் மறுப்பதற்கில்லை. அவர்களில் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களிடம் மட்டுமே சொந்த காணிகள் இருந்தன. அவர்கள் தங்கள் காணிகளில் வந்து மீள்க்குடியேற கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனோ, கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரியோ எதிர்க்கவில்லை. யாழ்ப்பாணத்தில் உயர்பாதுகாப்பு வலையங்களால் இன்னும் தமது சொந்த நிலத்திலுள்ள வீடுகளுக்கு போக முடியாமால் நூற்றுகணக்கான தமிழ் குடும்பங்கள் நாதி அற்று நிர்க்கதியாக நிற்கும் சூழலில் அரச அதிகாரத்துடன் பெரும்பான்மை மக்களை குடியேற்றம் செய்வோமென நெடுங்குரலெழுப்புவதில் என்ன நியாயம் இருக்கின்றது.
கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி போன்ற தலைவர்கள் தமிழினத்தின் நியாயமான அரசியல் உரிமைக்காக குரல் கொடுக்கிறார்களே அன்றி அவர்கள் ஒருபோதும் வன்முறை வழிமுறைகளை அரசியலில் ஆதரித்தவர்களும் அல்ல; இனி ஆதரிக்கப் போவர்களும் அல்ல.
புத்தபிரானின் போதனைகளில் புகழ்பெற்ற ஒரு வாக்கியமான , ” ஒரு யுத்தத்தில் தோற்றவர்களிலும் பார்க்க ஒரு யுத்தத்தை வென்றவர்கள் நிம்மதியாக இருக்க மாட்டார்கள்” என்பதைத் தவிர வேறெதையும் நினைத்து எம்மை நாம் தேற்றிக்கொள்ள முடியாது.
http://epaper.virakesari.lk/ArticleImage.aspx?article=09_12_2011_002_008&mode=1
மூலம்/ஆக்கம் : ஊடக அறிக்கைYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply