பாதுகாப்பிற்கென 23 ஆயிரம் கோடி ரூபா; யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு அங்கவீனமுற்ற மக்களுக்கு எதுவும் இல்லை: நாடாளுமன்றத்தில் ஸ்ரீதரன்
இந்தியாவின் உதவியுடன் வடக்கில் 50 ஆயிரம் வீடுகளை அமைப்பதாக இருந்தது. எனினும் ஆயிரம் பேருக்குக் கூட இன்னும் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவில்லை. அமைத்த சில வீடுகளும் பாவிக்க முடியாத நிலையிலேயே இருக்கின்றன என்பதுடன் வடக்கில் வீடமைப்பு நத்தை வேகத்திலேயே நகர்கின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.யான ஸ்ரீதரன் தெரிவித்தார்.
அது மட்டுமன்றி கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கும் பிரதேச செயலாளர் பிரிவு கூட்டங்களுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை அழைக்கக் கூடாது என்று அரச தரப்பினர் கட்டாய உத்தரவு வழங்கியுள்ளனர் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
பொருளாதார வளர்ச்சி வேகம் 8 சதவீதமாக இருப்பதாகவும் யாழ்ப்பாணத்தின் பொருளாதார வளர்ச்சி வேகம் 23 சதவீதமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடமைப்புத் திட்டங்கள் நத்தை வேகத்திலேயே நகருகின்றன.
யுத்தத்தில் பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்களுக்கும் படையினருக்கும் 14 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு அங்கவீனமுற்ற மக்களுக்கென இந்த வரவு செலவு திட்டத்தில் எந்தத் திட்டமும் இல்லை.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு சொத்துக்களை எல்லாம் இழந்து மீளக்குடியேற்றப்பட்ட மக்களுக்கு பொது வசதிகளும் ஏனைய வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. சலுகைகளும் வழங்கப்படவில்லை.
பாதுகாப்பிற்கென 23 ஆயிரம் கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும் 20 வருட பொருளாதார தடையால் கஷ்டங்களை அனுபவித்த வன்னி மக்களின் பொருளாதார நிலைமைகளைக் கட்டியெழுப்புவதற்கு இதில் எந்தத் திட்டமும் முன் வைக்கப்படவில்லை.
ஏ 9 வீதியை புனரமைப்புச் செய்வதாகக் கூறுவதன் மூலம் வெளிநாட்டவர்கள் அந்த வீதியில் பயணிக்கும் போது இரு பக்கங்களையும் பார்ப்பதன் மூலமாக கிராமங்களில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டு விடாது.
கிளிநொச்சி மாவட்டத்தில் நகர் பகுதியைத் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களுக்கு மின்சார வசதிகள் இல்லை. நாட்டப்பட்டிருந்த மின் கம்பங்களும் தேர்தலின் பின்னர் அகற்றப்பட்டு விட்டன. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஷேட கருத்திட்டங்கள் தேவை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்புகள் இல்லை. வடக்கில் நிர்வாக அரச பதவிகளுக்கு தென் பகுதியைச் சேர்ந்தவர்களே நியமிக்கப்படுகின்றனர். இதனை அரசாங்கமே தனது அறிக்கையின் மூலமாக ஏற்றுக் கொண்டுள்ளது.
இந்த நேரம் பாராளுமன்றத்துக்கு நான் தெரிவு செய்யப்பட்டு இரண்டு வருடங்கள் ஆகின்றன. எனினும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கோ பிரதேச செயலாளர் கூட்டங்களுக்கோ தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அனுமதிக்கப்படுவதில்லை. கூட்டமைப்பை அழைக்கக் கூடாது என்று அரச தரப்பினால் கட்டாய பணிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் சபைக்கு தெளிவுபடுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply