அதிக பொருளாதார கட்டுப்பாடுகளுக்கு யூரோ நாணய நாடுகள் உடன்பாடு

யூரோ நாணயம் புழங்கும் நாடுகளில் ஏற்பட்டுள்ள கடன் நெருக்கடியை சமாளிக்கும் நோக்கில் தத்தமது நாடுகளின் வரி விதிப்பிலும், வரவு செலவுத் திட்டத்திலும் கட்டுப்பாடுகளைக் கொண்டுவருவதற்கான ஒரு திட்டத்துக்கு யூரோ புழங்கக்கூடிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உடன்பட்டுள்ளன.

பிரஸ்ஸல்ஸ் நகரில் நடந்த மாநாட்டில் இந்த உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 27 நாடுகளிடம் இருந்துமே இத்திட்டத்துக்கு சம்மதத்தைப் பெற வேண்டும் என இத்திட்டங்களை முன்வைத்த ஜெர்மனியும் பிரான்சும் முயன்றிருந்தன.

ஆனால் ஐக்கிய ராஜ்ஜியம் ஆட்சேபம் தெரிவித்ததை அடுத்து இத்திட்டங்கள் ஒரு புதிய ஐரோப்பிய ஒப்பந்தமாக ஆகாமல், அதற்கும் குறைவாக நாடுகள் இடையிலான ஒரு உடன்படிக்கையாகவே இத்திட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

இத்திட்டத்தில் முன்மொழியப்படும் சில நிதி ஒழுங்கு முறைகளில் இருந்து ஐக்கிய ராஜ்ஜியத்துக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் டேவிட் கெமரன் பிடிவாதமாகத் தெரிவித்து தற்போதைய உடன்படிக்கையை ஏற்க மறுத்துவிட்டார்.

இந்த உடன்படிக்கையை ஏற்பது பிரிட்டனின் நலன்களுக்கு உகந்ததல்ல என்பதால் பிரிட்டன் இதில் கையெழுத்திடவில்லை என்று கெமரன் தெரிவித்துள்ளார்.

தத்தமது நாடுகளில் அரசாங்க வரவு செலவு கணக்குகளை தயாரிக்கும்போது புதிய விதிமுறைகளுக்கு உட்பட யூரோ நாணயம் புழங்கும் நாடுகளின் தலைவர்கள் இந்த புதிய உடன்படிக்கையில் ஒப்புக்கொண்டுள்ளனர்.

அந்த விதிகளை கடைப்பிடிக்காமல் போனால், அந்த நாட்டின் மீது பொருளாதார தண்டனைகள் விதிக்கப்படும் என்பதற்கும் அவர்கள் உடன்பட்டுள்ளனர்.

ஒரு நாட்டின் வருடாந்திர மொத்த உள்நாட்டு உற்பத்தியில், அரை சதவீதத்துக்கு அதிகமாக பற்றாக்குறை ஏற்படாமல் பாத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்று சதவீதத்துக்கும் அதிகமான பற்றாக்குறை ஏற்படுமானால், அந்த நாட்டின் மீது தானாகவே பொருளாதார தண்டனைகள் விதிக்கப்படும்.
நாடுகளின் அரசியல் சாசனத்தில் கடுமையான பொருளாதார விதிகள் சேர்க்கப்படுதல்
ஐரோப்பாவில் பொருளாதார ஸ்திரத்தன்மை குலையாமல் பார்த்துக்கொள்வதற்கான புதிய வழிமுறையை கூடிய விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டுவருதல்.

கடன் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய நாடுகளுக்கு உதவுவதற்கு என ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் 20 ஆயிரம் கோடி டாலர்கள் வரையிலான நிதி சர்வதேச நாணய நிதியத்திடம் வழங்குதல்.

உள்ளிட்ட விஷயங்களுக்கு பிரிட்டன் தவிர்ந்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உடன்பட்டுள்ளன.
ஐரோப்பிய நாடுகள் தங்கள் சுயாதீன அதிகாரங்களை ஓரளவுக்கு விட்டுக்கொடுத்து, ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஓரளவு கூடுதல் அதிகாரங்களை கொடுத்து, மேலும் நெருங்கிவருவதாக இந்த உடன்படிக்கை அமைந்துள்ளது என செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply