பொலிஸ் காணி அதிகாரங்களை வழங்கலாம்: பேராசிரியர் திஸ்ஸ
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை இனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தில் உள்ளடக்க முடியும். எனவே அரசாங்கம் பேச்சுக்களில் விரிசல் ஏற்படுத்திக் கொள்ளாது நிரந்தர தீர்வொன்றிற்காக கூட்டமைப்புடன் இணைந்து முன்னகர வேண்டும் என்று அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
வடக்கு மற்றும் கிழக்கை மீள் இணைப்பது குறித்து தற்போது பேசுவதில் அர்த்தமில்லை. ஆகவே இரு தரப்பும் இணக்கப்பாட்டின் அடிப்படையில் விரைவான தீர்வொன்றுக்கு வர வேண்டும். இழுத்தடிப்பதால் யாருக்கும் பயனேற்படப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தொடர்ந்தும் கூறுகையில்,
அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தை கடந்த செவ்வாய்க்கிழமை அரசுக்கும் தமிழ் தேசியக் கூட்மைப்புக்கும் இடையில் நடைபெற்றது. இதில் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் குறித்து கூட்டமைப்பினரால் பேசப்பட்டுள்ளது. மேற்கூறிய இரு அதிகாரங்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என அரச தரப்பு நிராகரித்துள்ளது.
எவ்வாறாயினும் அதிகாரப் பகிர்வில் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் முக்கியமானவையாகவே நோக்கப்படுகின்றது. தேசிய அரசியல் அமைப்பில் 13ஆவது திருத்தச் சட்டத்தில் அதிகாரப் பகிர்வு யோசனைகளில் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. எனவே தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் மேற்கூறிய இரு அதிகாரங்களையும் தீர்வுத்திட்டத்தில் உள்ளடக்க முடியும் என்பதே எனது நிலைப்பாடாகும்.
வடக்கு மற்றும் கிழக்கை மீள் இணைப்பது குறித்து பேச்சுவார்த்தைகளில் தற்போது பேசுவது உகந்த விடயமல்ல. ஏனெனில் நிலையான தீர்வுக்கு இதனை விட முக்கியமான பல விடயங்கள் உள்ளன. தேசிய பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வு முக்கியமான விடயமாகும். இதன் உள்ளடக்கம் குறித்தே கடந்த காலங்களில் சர்வகட்சிக் குழுவிலும் பேசப்பட்டது.
எனவே தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லாத வகையில் இனப்பிரச்சினைக்கான தீர்வையும் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களையும் வழங்க முடியும் என்பதே எனது நம்பிக்கையெனக் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply