தமிழ் பேசும் தாயகத்தைக் காப்பாற்ற தமிழர் முஸ்லிம் ஐக்கியம் தேவை

வட பகுதியிலிருந்து முஸ்லிம் மக்களை எந்த அவகாசமும் கொடுக்காமல் பிறந்து வாழ்ந்து வளர்ந்த மண்ணிலிருந்து வெளி யேற்றியது கொடுமை. இதைவிடக் கொடு மை 1956 ஆம் ஆண்டிலிருந்து 1983 ஆம் ஆண்டுவரை மூன்று தடவைகள் உயிர் பறிக்கப்பட்டவர்கள போக உடைமைகள் அனைத்தையும் இழந்து கப்பல்களில் அநாதைகளாக அகதிகளாக தங்கள் தாயகம் என்ற நிலையில் வடக்கே சென்ற தமிழர்கள் இஸ்லாமியத் தமிழர்களை வெளியேற்றியதாகும்.

1956 ஆம் ஆண்டு ஜுன் மாதம் ‘சிங்களம் மட்டும்’ சட்ட மசோதா பாராளுமன்றத் தில் கொண்டுவந்ததை எதிர்த்து செல்வநாயகம் தலைமையில் சிலமணிநேரம் பட்டினி கிடக்கச் சென்றனர். இவர்கள் பாராளுமன்றத்தை உடைக்கச் செல்வதாகப் புரளி கிளப்பி ஆளுந்தரப்பிலிருந்த சிலரின் ஆசியுடன் குண்டர்கள் பட்டினி கிடக்கச் சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதன் எதிரொலியாக இங்கினியாகல, கல்லோயா, அம்பாறை ஆகிய குடியேறறப் பகுதிகளில் குடியேறிய தமிழர்கள் தாக்குதலுக்குள்ளானார்கள். அங்கு குடியேறியிருந்த தமிழர்கள் உடைமைகள் யாவற்றையும் இழந்து உடுத்த உடையுடன் உயிரைக் காப்பாற்ற தங்கள் மண்ணுக்குத் தப்பிச் சென்றனர். இவர்கள் மீண்டும் அப்பாறை கல்லோயாப் பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை.

பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த குண்டர்களினால் தாக்குதலுக்குள்ளாகி உயிர் காப்பதற்காக ஓடித் தப்பிய தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வடக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றியது பெரும் கொடுமை.

தமிழ் பேசும் மக்களின் உரிமைகளுக்காக ஜனநாயக முறையில் பாராளுமன்றத் தினுள்ளேயும் காந்தி வழியில் சாத்வீக முறையில் பாராளுமன்றத்திற்கு வெளியேயும் போராடப் போவதாக 1956 ஆம் ஆண்டு தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி பிரகடனப்படுத்தியிருக்கிறது.

1956 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் கிழக்கிலிருந்து இரண்டு முஸ்லிம் பிரதிநிதிகளும் தமிழரசுக் கட்சி வேட்பாளர்களாக போட்டியிட்டு பாராளு மன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டிருந்தார்கள். சிங்களம் மட்டும் சட்டத்தை எதிர்த்து வடக்கு கிழக்கு முஸ்லிம் பிரதிநிதிகளும் கடுமையாக ஆட்சேபித்து எதிர்த்தும் வாக்களித்தனர்.

இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பரவலாக்கல் மூலம் தீர்வு காண்பதற்கு 1957 ஆம் ஆண்டில் பிரதம மந்திரியாக இருந்த எஸ். டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கா தமிழர் தலைவர் செல்வநாயகத்துடன் ஓர் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார். இதற்கு எதிர்க்கட்சியிலருந்து எதிர்ப்புக் கிளம்பியதுடன் ஆளும் கூட்டணி கட்சிக்குள்ளும் எதிர்ப்பு எழுந்தது. கண்டித்து பாதயாத்திரை, ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இதனால் ஒப்பந்தத்தை பிரதமர் பண்டாரநாயக்காவே கிழித்தெறிந்தார்.

1958 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் இலங்கை தமிழரசுக் கட்சி வவுனியாவில் தனது மகாநாட்டை நடத்தியது. இம்மாநாட்டுக்கு வந்து தாக்குதல் நடத்த முடியாமல் போனதால் பொலனறுவை சென்று பதவியாவில் குடியேறிய சிங்களக் குண்டர்கள் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கினர். இதைத் தொடர்ந்து நன்கு திட்டமிட்டு தமிழர்களுக்கு எதிராக நாடு முழுவதும் இனக்கலகம் தொடங்கப்பட்டது. இதில் தமிழர்கள் பலர் உயிரிழந்ததுடன் பன்னீராயிரம் தமிழர்கள் சகலவற்றையும் இழந்து அகதிகளாகினர். இவர்களை அரசாங்கம் முதலில் கண்டு கொள்ளவேயில்லை. கொழும்புத் தமிழ்ப் பிரமுகர்கள் தஞ்சமளித்து பின்னர் அவர்களின் முயற்சியினாலேயே கப்பல்களில் தாயகமான வடக்கு கிழக்கிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதன் பின் சில குடும்பங்கள் கொழும்புக்குத் திரும்பவில்லை.

1958 ஆம் ஆண்டில் தொடங்கிய தமிழர்கள் மீதான இனவெறியும் கலகமும் பின்னர் 1977 ஆம் ஆண்டிலும் மிக உச்சமாக 1983 ஆம் ஆண்டிலும் திட்டமிட்டு நடத்தப்பட்டன. இதனால் தமிழர்கள் தாம் உழைத்துத் தேடிய சொத்துக்கள் அனைத்தையம் இழந்து பலர் உயிரையும் பலிகொடுத்து தங்கள் தாயகம் திரும்பவும் மற்றும் பலர் புலம்பெயர்ந்து செல்லவும் நேர்ந்தது. இவ்வளவு கொடுமைகளையும் அனுபவித்த தமிழர்கள் தம்முடன் பிறந்து வளர்ந்து வாழ்ந்த இஸ்லாமியத் தமிழர்களை குறுகிய நேர அவகாசத்தில் வெறுங்கையுடன் வெளியேற்றியது கொடுமையிலும் கொடுமையே!

1958 முதல் 1983 வரையான இனக்கலவரங்களின் விளைவாகவே தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தவேண்டி வந்தது. இந்த இளைஞர்களை ஒன்று சேர்க்காமல் பிரித்து வைத்தே ஆதரவும் ஆயுதமும் பயிற்சியும் கொடுத்து வளர்த்துவிட்டது இந்தியா. ஆயுதம் ஏந்திய இளைஞர்கள் பல இயக்கங்களாகப் பிரிந்து தங்களுக்குள் மோதிக்கொண்டன. இதில் இந்திய உளவுப் பிரிவுக்கும் பங்குண்டு. சில இயக்கங்கள் இலங்கை அரசுக்கும் உதவியாகத் திரும்பின.

இளைஞர்கள் தொடங்கிய விடுதலைப் போராட்டம் உள்மோதல்களின் விளைவாக பயங்கரவாதமாகியது. அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ் உலகப் பயங்கரவாத எதிர்ப்புத் தொடங்கியது இலங்கை ஆட்சியாளர்களுக்கும் வாய்ப்பானது. இந்தியாவின் போரை இலங்கை நடாத்தி வெற்றி கண்டது. வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் இடம்பெயர்ந்தனர். உள்நாட்டிலேயே முகாம்களில் தங்கி வாழவேண்டிய நிலை. இன்றும் சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாத குடும்பங்கள் பல. வன்னியிலும் கிழக்கிலும் வாழ்ந்த பல குடும்பங்கள் இன்று அங்கு திரும்பிச் செல்லமுடியாத நிலையிலுள்ளனர். பல இடங்கள் படைகளின் முகாம்களாகிவிட்டன. மீள்குடி யேற்றம் இன்றும் முடியவில்லை. மீள்குடியேற்றப்பட்டதாக சொன்ன இடங் களிலும் இன்னும் மக்கள் தறப்பாள்களின் கீழேயும் தகரக் கொட்டகைகளின் கீழேயும்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் வடக்கில் காணிகள் மீளப்பதியப்படவேண்டுமென ஆணை பிறப்பிக்கப்பட்டு பதியப்படுகின்றன. புலி கள் கொடுத்த காணிகள் என்று சொல்லி முன்பு குடியிருந்தவர்களின் இடங் கள் எடுக்கப்படுகின்றன. இந்நிலையில் வன்னிப் பகுதியில் முன்பு சிங்கள வர்கள் பல்லாயிரம் பேர் வாழ்ந்ததாக தெற்கில் குரல் எழுப்பப்படுகின்றது. புத்தர் சிலை வைக்கப்படுவதும் உரிமை கொண்டாடுவதற்கே.

முஸ்லிம்களை வடக்கிலிருந்து வெளியேற்றியவர்கள் இன்றில்லை. இப்பொழுது தமிழர்களும் வெளியேற்றப்பட்டுவிட்டார்கள். வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் தாயக பிரதேசமாக இருக்கும் என்று சொல்லும் நிலை இருக்காது. முன்பு திட்டமிட்டு குடியேற்றமுடியாமலிருந்த வடபுலத்து நிலங்களில் இப்பொழுது ஆயுதப் படைகளின் பாதுகாப்புடன் திட்டமிட்ட குடியேற்றம் அபிவிருத்தி என்ற பெயரையும் சேர்த்து துரிதமாக நடைபெறுகிறது.

கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் தீகவாபி புனித நகர் என்ற பெயரில் முஸ்லிம்களின் காணிகள் பறிக்கப்பட்டன. இன்று வடக்கிலும் கிழக்கிலும் தமிழர் களுடைய காணிகள் மட்டுமல்ல முஸ்லிம்களின் காணிகளுமே பறிபோய்க் கொண்டிருக்கின்றன. இப்பொழுது தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் ஐக்கியமாகத் தமது காணிகளை பாதுகாக்கத் தவறினால் தமிழ்ப்பேசும் பிரதேசம் என ஒன்றிருக்காது. எந்த இனத்துக்கும் எங்கும் தனிப்பிரதேசம் இல்லை என்று பஷில் ராஜபக்ஷ சொன்னது நினைவுக்க வருகிறது. இலங்கை சிங்கள பௌத்த தேசம் தானே.

: ஊர்சுற்றி
www.irukkiramonline.com

மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரை


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply