நடைபாதை வியாபாரத்தை தடைசெய்ய வேண்டும்: வவுனியா வர்த்தகர்கள்

வவுனியா நகரப்பகுதியில் அதிகரித்து வரும் நடைபாதை வியாபாரத்தை எதிர்வரும் 19ஆம் திகதியில் இருந்து நிறுத்தாவிட்டால் சாத்வீக முறையில் கடையடைப்பு போராட்டத்தை நடத்துவோம் என வவுனியா வர்த்தகர் சங்கம் வவுனியா நகரசபைத் தலைவருக்கு இன்று கடிதம் மூலமாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வர்த்தகர் சங்கம் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்படப்பட்டுள்ளதாவது,

வர்த்தக சங்கமானது பல தடவைகள் வவுனியா நகரசபை தலைவரிடமும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரிடமும் சந்திப்புக்களை நடாத்தி எமது வர்த்தக சமூகத்திற்கு ஏற்பட்ட பாதிப்புக்களை தெரியப்படுத்தினோம்.

இருந்தபோதிலும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளும் நகரசபை மேற்கொள்ளவில்லை. தற்போதைய நகரசபை தலைவரை சந்தித்து உரையாடுவதற்கு எமது நிர்வாகசபை உறுப்பினர்கள் அனுமதி கேட்ட பல சந்தர்ப்பங்களில் தலைவரை நேரம் ஒதுக்கித்தரவில்லை.

அரசாங்கதிற்கும் நகரசபைக்கும் அன்றிலிருந்து இன்றுவரை வரி செலுத்தியும் மக்களுக்கு வேலை வழங்கியும் அரச தனியார் நிறுவனங்களுக்கு நன்கொடைகள் விளம்பரங்கள் வழங்கியும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருளுதவி வழங்கியும் வருகின்றோம்.

அத்தோடு நாங்கள் வவுனியா மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் பொருள் பணம் சரீர உதவிகளையும் செய்து வருகின்றோம். இதனை தங்களின் மேலான கவனத்திற்கு தெரியப்படுத்துகின்றோம்.

நடைபாதை வியாபாரத்தால் மக்கள் நடமாட முடியாமல் உள்ளதுடன் ஆங்காங்கே வாகனங்களை வைத்து வியாபாரமும் நடைபெறுகின்றது. இதனை அந்த இடங்களில் மக்கள் கூடும்போதும் வாகனங்கள் பிரயாணம் செய்யும்போதும் விபத்துக்கள் ஏற்படுகின்றது.

எமது நிறுவனங்களுக்கு வரும் வாகனங்களை நிறுத்துவதற்கும் இடமில்லாத நிலையுள்ளது. எனவே எதீக்வரும் 19ஆம் திகதி தொடக்கம் நடைபாதை வியாபாரத்தை நிரந்தரமாக தடைசெய்யாவிட்டால் வர்த்தக சங்கத்தின் நிர்வாக சபை முடிவிற்கிணங்க கடைகளை அடைத்து அமைதியான சாத்வீக ரீதியிலான போராட்டம் ஒன்றினை நடத்த தீர்மானித்துள்ளோம்.

கொழும்பையும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களிலும் நடைபாதை வியாபாரம் முற்றாக அப்புறப்படத்தப்பட்ட நிலையில் வவுனியாவில் நடைபாதை வியாபாரம் தொடர்வது மனவருத்தத்தை உண்டுபண்ணுவதாகவுள்ளது.

அரசாங்கத்திற்கும் நகரசபைக்கும் செலுத்தாமல் சட்டத்திற்கு விரோதமாக நடைபாதை வியாபாரத்தை ஆதரிக்கலாமா?  நீங்கள் நடைபாதை நிரந்தரமாக அகற்றுவதற்கு குறுகிய காலத்திற்கு குழு ஒன்றினை அமைத்து நடைபாதை கடைகளை காலையில் இருந்து மாலை வரை அகற்றி வரவேண்டும்.

நாங்கள் தொலைபேசி ஊடாக தகவலை வழங்கிவருவோம். அவ்வாறு 30 நாட்கள் செயற்பட்டால் நடைபாதை வியாபாரம் முற்றாக நின்று விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக நகரசபையின் உபதலைவர் எம்.எம்.ரதனிடம் கேட்போது, ‘இன்று நகரசபை உறுப்பினர்கள் கூடி எதிர்வரும் திங்கட்கிழமையில் இருந்து நடைபாதை வியாபாரத்தை அகற்றுவதெனவும் அது தொடர்பில் எதிர்வரும் 3 நாட்களுக்க பகிரங்க அறிவித்தல் வழங்கவுள்ளதாகவும்’ நகரசபையின் உபதலைவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply