படையினர் மறுப்பதனால் 2 லட்சம் மக்கள் மீள்குடியமர முடியாத நிலை

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளுடன் சேர்த்து இரண்டு இலட்சம் அகதிகள் வடக்கில் இன்னும் மீள்குடியேற்றப்படவேண்டியுள்ளனர் என்றும் படையினர் அனுமதி மறுப்பதாலேயே இவர்களால் மீள்குடியேற முடியாமல் உள்ளது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா நேற்று நாடாளுமன்றில் கூறினார்.

வரவுசெலவுத்திட்டத்தின் காணி மற்றும் மீள்குடியேற்ற அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேலும் கூறியவை வருமாறு:

இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளுடன் சேர்த்து இரண்டு இலட்சம் அகதிகள் மீள்குடியேறவேண்டிய நிலையில் உள்ளனர். இராணுவத்தினர் வடக்கில் இந்த மக்களின் நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதால்தான் இந்த இரண்டு இலட்சம் அகதிகளால் மீள்குடியேற முடியாமல் உள்ளது.

வலிகாமம் வடக்கில் மக்களை மீள்குடியமர்த்த அனுமதிக்குமாறு 2003முதல் நீதிமன்றம் தீர்ப்புகளை வழங்கிவருகின்றது. இருந்தும் மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்படுவதில்லை.

அந்தப் பகுதியில் விகாரை அமைத்து, வீடுகளைக் கட்டி சிங்களவர்கள் வந்து தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே விகாரைகள் அமைக்கப்பட்டு, அழிக்கப்பட்ட இடங்களில் விகாரைகள் அமைத்தால் பரவாயில்லை. ஆனால், காலம்காலமாக வாழ்ந்த மக்களின் நிலங்களைப் பிடித்து விகாரைகள் அமைப்பது சரியில்லை.

வலிகாமம் வடக்கில் 34 ஆயிரம் பேர் மீள்குடியேறவேண்டியுள்ளது. இதற்குப் படையினர் அனுமதி மறுத்துள்ளனர். மீள்குடியேற்றம் என்பது முகாம்களில் உள்ளவர்களை சொந்த இடங்களில் கொண்டுபோய் விடுவது மட்டுமல்ல.

மீள்குடியேற்றப்படும் மக்களுக்கு வீடுகள், நட்டஈடுகள், நிவாரணங்கள் போன்றவை வழங்கப்படவேண்டும். எஞ்சியுள்ள மக்களை மீள்குடியேற்ற, மீள்குடியேற்ற அமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்கு நாங்கள் முழு ஒத்துழைப்பும் வழங்குவோம். அழைக்கின்ற இடங்களுக்கு நாம் வருவோம்.

மீள்குடியேற்றத்தின்போது ஏனைய அமைச்சர்களின் தலையீடு இருக்கக்கூடாது. அமைச்சர் ரிஷாத் பதியூதீன், மன்னார் சன்னர் பகுதியில் மீள்குடியேறிய மக்களை வெளியேற்றியுள்ளார். இது தொடர்பாக மீள்குடியேற்ற அமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும். மீள்குடியேற்றத்தை முழுமைப்படுத்தவேண்டும்.

மீள்குடியேற்ற அமைச்சர் கருணை உள்ளம் படைத்தவர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு உதவ வந்தபோது, நாம் இதை உணர்ந்தோம். ஆனால், மீள்குடியேற்ற அமைச்சுக்கு வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கியுள்ள நிதி போதாது. அமைச்சின் செலவுக்கே அந்த நிதி போதுமானதாக இருக்கும் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply