ஏ-9 வீதி படையினரின் முழுக்கட்டுப்பாட்டில் : ஜனாதிபதி

ஏ-9 பாதை முழுமையாக அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக அறிவித்தார். பிற்பகல் 5 மணியளவில் தேசிய தொலைக்காட்சியில் விசேட உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனை அறிவித்தார். அவ்வப்போது ஏ-9 பாதையின் சில பகுதிகளை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியிருந்தாலும், 23 வருடங்களுக்குப் பின்னர் தற்பொழுது அதனை இராணுவத்தினர் முழுமையாக தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்திருப்பதாகவும் அவர் கூறினார்.

“2009 ஆம் ஆண்டை வெற்றியின் ஆண்டாக நான் ஏற்கனவே அறிவித்துள்ளேன். பரந்தன் வெற்றியுடன் ஆரம்பமாகிய இந்த ஆண்டில் கிளிநொச்சி கைப்பற்றப்பட்டதன் வெற்றிக் கோஷங்கள் தணிவதற்கு முன்னரே ஆனையிறவையும் கைப்பற்றியுள்ளோம்” என்றார் அவர்.

9 வருடங்களுக்கு முன் ஆனையிறவு படையினரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டபோது அந்த மோதல்களில் 350படையினர் உயிரிழந்ததுடன் 349பேர் காணாமல்போயிருந்தனர் எனவும், 2500க்கும் அதிகமான படையினர் காயமடைந்ததாகவும் ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்டார்.

“முகமாலையில் இருந்து ஆனையிறவை நோக்கி முன்னேறுவதற்கு 53ஆம், 55ஆம் படைப் பிரிவினர் அவ்வப்போது முயற்சிகளை மேற்கொண்டனர். அந்த முயற்சியின் பலனாக இன்று ஆனையிறவு கைப்பற்றப்பட்டது” என ஜனாதிபதி தெரிவித்தார்.

4 வருடங்களுக்கு முன்னர் ஏ-9 பாதையூடாக யாழ்ப்பாணத்திற்குப் பயணித்த தெற்கு உள்ளிட்ட ஏனைய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து வரி என்ற பெயரில் விடுதலைப் புலிகள் இலட்சக்கணக்கான கப்பப் பணத்தினை சேகரித்திருந்ததாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டினார்.

இராணுவத்தினரின் வெற்றியை மழுங்கடிக்கும் நோக்கில் தெற்கில் இருக்கும் சில சக்திகள் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இவ்வாறான சக்திகளின் கோஷங்களுக்கு செவிமடுக்காமல் தேசிய ஒருமைப்பாட்டுக்காக ஒன்றிணைய நாட்டு மக்கள் தயாராக வேண்டும் எனவும் வேண்டுகோள்விடுத்தார்.

இது இவ்விதமிருக்க, பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் நத்தார் தினத்தன்று கொல்லப்பட்டிருந்தமையையும், ஊடக சுதந்திர தினத்தன்று உதயன் பத்திரிகை நிறுவனம் தாக்கப்பட்டமையையும் நினைவுகூறிய ஜனாதிபதி, இந்தப் படுகொலைகளை அரசாங்கம் செய்யவில்லையென்பது தற்பொழுது புலனாகியிருப்பதாகத் தெரிவித்தார்.

இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட ஆனையிறவின் சில பகுதிகளும், ஆனையிறவின் ஊடாகச் செல்லும் ஏ-9 வீதியின் தற்போதைய காட்சிகளும் தேசிய தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply