கிளிநொச்சி முல்லையில் 10,000 குடும்பங்கள் மழையால் பாதிப்பு
வடகீழ் பருவ பெயர்ச்சி மழைக் காலநிலை ஆரம்பித்துள்ளதால் ஏற்பட்டுள்ள மழை, வெள்ளம் காரணமாக நாட்டில் 10 ஆயிரத்து 225 குடும்பங்களைச் சேர்ந்த 38 ஆயிரத்து 735 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடுப்பிலி நேற்றுத் தெரிவித்தார்.
இவர்களில் 1668 குடும்பங்களைச் சேர்ந்த 6215 பேர் இருப்பிடங்களை விட்டு தற்காலிகமாக வெளியேறி 41 முகாம்களில் தங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இம்மழைக் கால நிலை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் கடலுக்குச் சென்றிருந்த வேளையில் கடல் கொந்தளிப்பில் சிக்கி உயிரிழந்திருப்பதாக அன ர்த்த முகாமைத்துவ நிலையத்தின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் பி.ஆர்.பி. குளாப் கூறினார். இப்பருவ பெயர்ச்சி மழைக் காலநிலை காரணமாக கிளிநொச்சி, மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் நிலையத்தின் பேச்சாளர் கொடுப்பிலி கூறினார்.
இம்மழை கால நிலையினால் ஏற்பட்டுள்ள வெள்ள நிலையால் கிளிநொச்சி மாவட்டத்தில் 3539 குடும்பங்களைச் சேர்ந்த 14 ஆயிரத்து 456 பேரும், யாழ். மாவட்டத்தில் 3484 குடும்பங்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 381 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 3000 குடும்பங்களைச் சேர்ந்த 120 ஆயிரத்து 95 பேரும், மன்னார் மாவட்டத்தில் 175 குடும்பங்களைச் சேர்ந்த 729 பேரும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
இக்காலநிலை மாற்றம் காரணமாகப் பாதிக்கப்பட்டு தற்காலிகமாக இடம்பெயர்ந்திருப்பவர்களுக்கு சமைத்த உணவு நிவாரணம் வழங்குமாறு சகல மாவட்ட செயலாளர்களுக்கும் அரசாங்கம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை இம்மழையினால் நாட்டிலுள்ள 32 பாரிய குளங்களும், 85 சிறிய குளங்களும் தற்போது நிரம்பி வழிவதாகவும், 13 குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டு நீர் மட்டம் பேணப்படுவதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் உயரதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார்.
மகா கனதராவ, நாச்சியாதுவ, ராஜாங்கணை, வாகல்கட, உறுகாமம், உன்னிச்சை, வேரகல, ஹந்தபான்கல, கவுடுல்ல, மின்னேரியா, பராக்கிரம சமுத்திரம், கந்தளாய் ஆகிய 13 குளங்களினதும் வான் கதவுகள் திறக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
அம்பாறை மாவட்டத்தில் நேற்று முதல் மேலும் இரு குளங்கள் நிரம்பி வழிவதாகக் குறிப்பிட்ட அவர், மட்டக்களப்பு, திருகோணமலை, அநுராதபுரம், பொலன்னறுவை, பதுளை, மாத்தளை வவுனியா, கிளிநொச்சி, ஹம்பாந்தோட்டை, மொனறாகலை ஆகிய மாவட்டங்களிலும் குளங்கள் நிரம்பி வழிவதாகவும் குறிப்பிட்டார்.
நீர் மட்டம் அதிகரித்துள்ள குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட முன்னர் பிரதேச வாசிகளுக்கு முன்னறிவித்தல்கள் விடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
ராஜாங்கனை குளத்தின் 12 வான் கதவுகள் திறக்கப்பட்டு நீர் மட்டம் பேணப்படுவதால் புத்தளம், எழுவன் குளப் பிரதேசத்தில் ஐந்து அடிகள் உயரத்திற்கு வெள்ள நீர் புத்தளம் – மன்னார் கரையோரப் பாதையைக் கடப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் புத்தளம் மாவட்ட இணைப்பாளர் லெப்டினண்ட் கேர்ணல் ஆர்.ஏ. ரணவீர கூறினார்.
இதன் காரணத்தினால் புத்தளம் – மன்னார் கரையோரப் பாதை போக்குவரத்துக்காகத் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த வெள்ள நிலைமை குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு எழுவான்குளப் பிரதேச வாசிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
சீரற்ற காலநிலை தொடரும் தற்போதைய மழைக் காலநிலை அடுத்துவரும் சில தினங்களுக்கு நீடிக்கும் என்று வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் மெரில் மென்டிஸ் நேற்றுத் தெரிவித்தார். இதன் விளைவாக வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் மழை பெய்யும் என்றும் அவர் கூறினார்.
வட கீழ் பருவ பெயர்ச்சி மழை காலநிலை ஆரம்பமாகியுள்ளதால் கடல் கொந்தளிப்பாகக் காணப்படுகின்றது. அதனால் சில சந்தர்ப்பங்களில் கடலில் காற்றின் வேகம் 60 – 70 கிலோ மீற்றர்கள் வரை அதிகரிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply