சிவில் சமூக அறிக்கை குறித்து மன்னார் ஆயருக்கு சம்பந்தன் கடிதம்
வடக்கு-கிழக்கு சிவில் சமூகத்தின் விண்ணப்பம் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களோடு கலந்துரையாடுவதற்குத் தயாராக உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்புக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தின் முழு விபரம் வருமாறு,
இரா. சம்பந்தன்
நாடாளுமன்ற குழு தலைவர்
தமிழ் தேசிய கூட்டமைப்பு
2D, கெப்பிட்டி பொல மாவத்தை
சமிட் தொடர்மனை
கொழும்பு- 05
டிசெம்பர் 23 2011.
அதி. வண. கலா.இராயப்பு ஜோசப்
ரோமன் கத்தோலிக்க பேராயர்
மன்னார் மறை மாவட்டம்
பேராயர் இல்லம்
மன்னார்.
வணக்கத்திற்குரிய ஐயா,
தமிழ் மக்களின் ஒரு சில பிரச்சினைகள் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தாங்களும் இன்னும் சிலரும் அனுப்பிய கடிதத்திற்கு பதிலாக இக்கடிதத்தை எழதுகிறேன். அதிக வேலைப்பலுவின் நிமித்தம் பதில் எழுதுவதில் ஏற்பட்ட தாமதிற்காக வருந்துகிறேன்.
எனக்கு கிடைக்கப்பெற்ற கடிதத்தில் அநேகர் கையெழுத்தாளர்களாக குறிப்பிடப்பட்டிருந்தாலும் எவரும் அக்கடிதத்தில் கையெழுத்திட்டிருக்கவில்லை. எனினும் தங்களின் பெயர் முதன்மையாக இருந்தபடியினால் இப்பதிலை தங்களுக்கு எழுத தீர்மானித்தேன்.
தாங்கள் அனுப்பிய கடிதமானது ஊடகங்களிலும் முக்கியத்துவம் பெற்றிருந்ததை அவதானித்தேன். எனவே இப்பதில் கடிதத்தையும் ஊடகங்களுக்கு தெரியப்படுத்துவேன் என்பதை தங்களுக்கு அறிவிக்க விரும்புகிறேன்.
அரசாங்கத்திற்கும் எமக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் இடம்பெறும் எல்லா விடயங்களையும் பொதுமக்களிற்கு வெளியிடுவது சாத்தியமற்றதாகும்.
எனினும் ஏற்றுக்கொள்ள கூடியதும் நடைமுறை சாத்தியமானதும் நிலையானதும் பெரும்பான்மையான எமது மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற கூடியதுமான அரசியல் தீர்வை நோக்கியதாக எமது பேச்சுவார்த்தை கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகிறேன்.
தங்கள் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்கள் குறித்து தங்களோடும் ஏனையவர்களோடும் கலந்துரையாடுவதற்கு நாம் தயாராக உள்ளோம். தங்களின் பதிலினை தொடர்ந்து அதற்கான ஆயத்தங்களை செய்து கொள்ளலாம்.
மதிப்பிற்குரிய வணக்கங்களுடன்
தங்கள் உண்மையுள்ள
இரா. சம்பந்தன்
நாடாளுமன்ற உறுப்பினர்
நாடாளுமன்ற குழு தலைவர்
தமிழ் தேசிய கூட்டமைப்பு
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply