லஸந்த விக்கிரமதுங்க கொலையை கண்டித்து ஊடகவியலாளர்கள் கொழும்பில் இன்று பாரிய ஆர்ப்பாட்டம்

சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லஸந்த விக்கிரமதுங்க கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், சிரச ஊடகம் மீதான தாக்குதலைக் கண்டித்தும் மற்றும் அனைத்து ஊடக சுதந்திரம் நசுக்கப்படுவதற்கு எதிராகவும் இன்று (09) கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.   நண்பகல் 12:00 மணி தொடக்கம் பிற்பகல் 1:30 நிமிடம் வரை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்கள், பொது அமைப்புக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

சுதந்திர ஊடக இயக்கம், உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் உட்பட ஐந்து ஊடக அமைப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணி லேக் ஹவுஸ் அரச பத்திரிகை நிறுவனத்திற்கு முன்பாக நடைபெற்றது.

சுமார் ஒன்றரை மணித்தியாலம் நீடித்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ரவி கருணாநாயக்க, திஸ்ஸ அத்தநாயக்க, மங்கள சமரவீர, வைத்திய கலாநிதி ஜயலத் ஜயவர்த்தன, தயாசிரி ஜயசேகர, ஜோசப் மைக்கல் பெரேரா, முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம், இடதுசாரிக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண உள்ளிட்ட பல எதிர்க்கட்சி அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

ஊடக சுதந்திரத்துக்கு எதிரான அனைத்து வன்முறைகளையும் கண்டித்து எழுதப்பட்ட பல பதாதைகளைத் தாங்கிய வண்ணமும் கோசங்களை எழுப்பியபடியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply