பேச்சுக்களில் நெகிழ்வுத் தன்மையை கடைப்பிடிக்குமாறு வேண்டுகோள்

அரசாங்கத்திற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் நடைபெற்று வருகின்ற பேச்சுவார்த்தையில் இரு தரப்பினரும் நெகிழ்வு தன்மையை கடைப்பிடிக்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரசாங்கம் – தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய இருதரப்பினருக்கும் இடையில் நடைபெற்ற வருகின்ற பேச்சு தொடர்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தேசிய இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தைகளின் ஊடாகத் தீர்வு காண்பதில் நம்பிக்கை கொண்ட ஓர் அரசியல் கட்சி என்ற அடிப்படையில் அண்மைக் காலமாக ஊடகங்களில் அரசாங்கமும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் வெளியிட்டு வரும் அறிக்கைகள் தொடர்பில் எமது கட்சி அதிக அக்கறை செலுத்தி வருகிறது.

இலங்கையர் ஒவ்வொருவரும் தாம் சமத்துவமான பிரஜையென உணரத்தக்க வகையில் இலங்கையில் கௌரவமானதும், நிலையானதுமான சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு ஒரு பொன்னான வாய்ப்பு மீண்டும் கிடைத்துள்ள முக்கியமான சந்தர்ப்பம் இதுவென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மறுபடியும் சுட்டிக் காட்டுகின்றது.

அதன் காரணமாகவே, முஸ்லிம்களையும் இந்திய வம்சாவளித் தமிழர்களையும் உள்வாங்கியதாக சகல சமூகத்தவரின் தனிப்பட்ட அபிலாஷைகளையும் பிரதிபலிக்கத்தக்கதாக பன்முகத்தன்மை கொண்ட பேச்சுவார்த்தையே பயனளிக்கக்கூடியது என முஸ்லிம் காங்கிரஸ் வலியுறுத்துகின்ற போதிலும், அரசாங்கத்திற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை ஆதரிக்க நேர்ந்திருக்கிறது.

அண்மைக் காலத்தில் வெவ்வேறு சமூகங்கள் மத்தியில் நம்பிக்கை சிதைவடைந்து கொண்டே சென்றுள்ளதை ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. வேறுபாடுகளை மேலும் கடினமாக்காது, நீண்ட எதிர்காலத்தையும், என்றும் நிலைத்து நிற்கக்கூடிய சமாதானத்தையும் கருத்திற் கொண்டு நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவது இன்றியமையாதது.

நாம் முன்னர் கூறியவாறு சமாதானமும், நீதியும் சகலருக்கும் கிடைக்காத பட்சத்தில் ஒரு சமூகமோ, ஒரு பிராந்தியமோ மாத்திரம் அவற்றை அடையப்பெறுவது அறவே சாத்தியமில்லை. சமூகங்களுக்கிடையிலான ஒத்துழைப்பு சமாதானத்திற்காக மட்டுமன்றி, அபிவிருத்திக்கும் சுபீட்சத்திற்கும் அவசியமானதாகும்.

இவ்வாறான சூழ்நிலையிலேயே, நாட்டில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ள அரசாங்கம், பேச்சுவார்த்தைகளின் ஊடாக எதிர்பார்க்கப்படும் சமாதானத்தை அடைவதற்கான சந்தர்ப்பத்தை நழுவ விடக் கூடாது. அரசாங்கம் வெற்றிக் களிப்பில் தீர்வொன்றை வழங்க முற்படலாகாது. அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஓரளவு நெகிழ்வுத் தன்மையைக் கடைப்பிடிப்பது அரசாங்கத்தின் உண்மையான கரிசனையை அறிந்து கொள்வதற்கு உதவலாம்.

சுலோகங்களுக்கும், கோஷங்களுக்கும், தொகுதிவாரியான அழுத்தங்களுக்கும், கடினமான நிலைப்பாடுகளுக்கும் எதிராக நின்றுபிடிப்பது இலேசான காரியமல்ல. ஆயினும், உணர்வுபூர்வமான மனநிலைக்கு இடமளிக்காது நாட்டில் நிலையான சமாதானத்தை அடையப் பெறுவதற்காக மக்களை வழிநடத்துவது காலத்தின் தேவையாகும்.

இந்தப் பின்னணியில் பேச்சுவார்த்தைகளைப் பாதிக்கக்கூடிய கடினமானதும், இறுக்கமானதுமான நெருக்குதல்களுக்கு இலக்காகாது, தற்போது நிலவும் நல்லுறவைப் பேணி பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கக்கூடியவாறு நெகிழ்வுத் தன்மையைக் கடைப்பிடிக்குமாறு அரசாங்கத்தையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வினயமாக வேண்டிக் கொள்கிறது.

சமாதானத்தை நேசிக்கும் இலங்கை மக்களின் விமோசனத்திற்காக இருதரப்பினருக்குமுள்ள முதிர்ச்சியையும், அனுபவத்தையும் உகந்த முறையில் பயன்படுத்தி ஆக்கபூர்வமான உடன்பாடுகளை எட்டக்கூடிய விதத்தில் பேச்சுவார்த்தைகளைத் தொடருமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் மேலும் கேட்டுக்கொள்கிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply